சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு.. தவெக பிரமுகர்கள் 3 பேர் கைது.. பின்னணி
சென்னை: சென்னை நொளம்பூரில் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது. இதில் ஒரு தரப்பினர் பட்டாக்கத்தியுடன் வீடு புகுந்து 24 வயது இளைஞர் சஞ்சய் உள்பட 3 பேரை கத்தியால் குத்தினர். இதில் சஞ்சய் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் தவெகவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி ரூபேஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நொளம்பூர் யூனியன் சாலையில் வசித்து வரும் முருகதாஸ்-செல்வி தம்பதியரின் மகன்கள் சரத் (27), சஞ்சய் (24). இவர்கள் இருவரும் வீட்டின் அருகே தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆட்டோவில் வந்த மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜாவிடம் அவர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியதில் உதயராஜாவை சஞ்சய் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பட்டாக் கத்தியுடன் புகுந்த கும்பல்
இதனால் கோபத்துடன் அங்கிருந்து சென்ற உதயராஜா, தனது சகோதரர்களான ராகேஷ்ராஜா, கார்த்திக்ராஜா மற்றும் நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் பழிவாங்கும் நோக்கில் பட்டாக்கத்திகளுடன் 8 பேர் கொண்ட கும்பல் சரத், சஞ்சய் வீட்டுக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீடு பூட்டியிருந்ததால் முதலில் வீட்டின் மீது மதுபாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சரத், சஞ்சய் மற்றும் அவர்களை காப்பாற்ற வந்த தந்தை முருகதாஸ் ஆகிய 3 பேரை 8 பேர் கும்பல் சரமாரியாக பட்டாக்கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சஞ்சய் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சரத் மற்றும் முருகதாஸ் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நொளம்பூர் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தவெகவை சேர்ந்த 3 பேர் கைது
இதன்பேரில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த உதயராஜா, அவரது சகோதரர்கள் கார்த்திக்ராஜா, ராகேஷ்ராஜா, வீட்டு உரிமையாளர் நவீன்குமார் மற்றும் நண்பர்களான ரூபேஷ், மேசாக், சூர்யா, சூர்யபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சூர்யா, ராகேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் தவெகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைது நடவடிக்கையின்போது ரூபேஷ் மட்டும் பட்டாக்கத்தியுடன் போலீசாரை மிரட்டி, சரணடைய மறுத்ததாக கூறப்படுகிறது.
அவரை சமாதானப்படுத்த முயன்ற ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் மீது ரூபேஷ் பட்டாக்கத்தியால் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற வந்த போலீஸ் ஏட்டு பவுன்ராஜுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. தொடர்ந்து ரூபேஷ் தாக்க முயன்றதால், தற்காப்பு நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தனது கைத்துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். அதில் ரூபேஷின் வலது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவரையும் போலீசார் கைது செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
டிப்ளமோ மாணவர்
ரூபேஷ் மீது ஏற்கனவே 6 வழக்குகள் இருப்பதாகவும், அவர் 'சி' பிரிவு ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் மற்றும் போலீஸ் ஏட்டு பவுன்ராஜும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சஞ்சய், பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பொறியியல் படித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கானாத்தூர் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சென்னை நகரில் ரவுடியிசத்துக்கு இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.















Click it and Unblock the Notifications