மீனவர்களுக்கு குட்நியூஸ்.. இன்று முதல் 1.79 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்துக்காக ரூ.89.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிவாரண தொகை இன்று முதல் 14 கடலோர மாவட்டத்தில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் என்பது 61 நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வது இல்லை.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாள் நடைமுறையில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதோடு, இன்று முதல் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்துக்காக மொத்தம் தமிழ்நாடு அரசு ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஒரு மீனவ குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இந்த ரூ.89.50 கோடி நிவாரண தொகை பிரித்து ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் இன்று முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications