மேகதாது அணையை எதிர்த்தால்.. தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது -கர்நாடகா நீர்வள அமைச்சர் மிரட்டல்
பெங்களூர்: காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் பங்கை வழங்க சாத்தியமில்லை என்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மிரட்டி உள்ளார்.
கர்நாடகாவில் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதில் அம்மாநில அரசு உறுதியாக உள்ளது. இன்னும் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே தான் மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.

தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காது என்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தனி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
இந்நிலையில் தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழகம் எதிர்த்தால் காவிரியில் இருந்து தண்ணீர் வழங்க முடியாது என்று அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
''மேகதாதுவில் புதிதாக அணை கட்டினால் அங்கு 67 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். அதனால் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. பெங்களூருவுக்கு 4.75 டிஎம்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுவதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் மேகதாது அணையின் முக்கிய நோக்கம்.
ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மழை பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த சமயங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உருவாகிறது. இந்த மாதம் (ஜூன்) 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். இதுவரை 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழ்நாடு சட்டசபையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக ஒன்றிணைந்து போராடவும் முடிவெடுத்துள்ளனர்.
மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தால், தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் பங்கை வழங்க சாத்தியமில்லை.
ஏனென்றால் மேகதாதுவில் அணை கட்டினால் அங்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து விடலாம். இதனால் இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு தான் லாபம். தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தால் அங்குள்ள விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.
மேகதாதுவில் அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். சில தவறுகளை திருத்தி மத்திய ஜல்சக்தி துறையிடம் வழங்குவோம். மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம். மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளுமா? என்பது தெரியவில்லை. அண்டை மாநில பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் சென்றால் காலம் தான் விரையம் ஆகும்'' என்றார்.














Click it and Unblock the Notifications