"திருத்த முடியாது".. வெளிப்படையாக சீறிய ஸ்டாலின்.. "கொச்சை".. திமுகவிற்கு தந்த முக்கிய அசைன்மென்ட்!
சென்னை: நேற்று ட்விட்டர் ஸ்பேசில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவை மறைமுகமாக தாக்கி கடுமையாக விமர்சனம் செய்தார். மதவாத சக்திகள் என்று குறிப்பிட்டு கடுமையான கருத்துக்களை அவர் வைத்தார்.
அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தை திமுக திராவிட மாதமாக கொண்டாடி வந்தது. திமுக ஐடி விங் சார்பாக இதற்காக ட்விட்டர் ஸ்பேஸ் நடத்தப்பட்டு வந்தது.
தினமும் ஒரு தலைவர் என்று தொடங்கி அமைச்சர்கள், அறிஞர்கள் என்று பலர் பேசினார்கள். இதில் நேற்று நடந்த உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மாதத்தின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின் " திராவிட அரசு" என்ற தலைப்பில் பேசினார்.
பாஜக மீது விமர்சனம்.. திமுக தொண்டர்களுக்கு அறிவுரை.. அவர்களுக்கு ஒரு முக்கிய அசைன்மென்ட் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சின் முக்கியமான சில விஷயங்கள் இடம்பெற்று இருந்தன.

பாஜக மீது விமர்சனம்
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் பாஜகவை விமர்சிக்கையில், திராவிடம் தமிழர்களுக்கு கற்பித்தது, திராவிடம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, திராவிடம் தமிழ்நாட்டை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக உயர்த்தியது, திராவிடம் சமூக நீதியை கொடுத்தது, திராவிடம் பெண்களை முன்னேற்றியது. திராவிடம் கல்வி கொடுத்தது, அடித்தட்டு மக்களை உயர்த்தியது. பள்ளிக்கூடம் சென்றவர்களுக்கு காலை, மதியம் உணவு கொடுத்தது. திராவிடம் மொத்த தெற்கையும் உயர்த்தியது. இதுதான் திராவிடம்.

ஸ்டாலின்
திராவிடம் இடஒதுக்கீட்டை உருவாக்கியது. ஆண்கள் மட்டுமல்ல அனைத்து சாதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் எல்லோரும் படிக்கலாம் என்று நிலையை திராவிடம் ஏற்படுத்தியது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எப்படி, இன்று எப்படி இருக்கிறது, 50 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலங்கள் எப்படி இருந்தது, இப்போது அந்த மாநிலங்கள் எப்படி இருக்கிறதை என்று பார்த்தாலே தெரியும். நம்முடைய சாதனைகள்தான் அவர்களின் கருத்துக்களுக்கு பதில், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திராவிடம்
அதில், ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாதவர்கள், திராவிடம் என்ற சொல்லை தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதன் வாழ்க்கை முறை. இதற்கு நீங்கள் வரலாறு படிக்க வேண்டும். முறையாக படித்தால் உங்களுக்கு புரியும். எதையும் படிக்காமல் வாட்ஸ் ஆப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு நாம் பதில் சொல்ல முடியாது.

திருத்த முடியாது
அவர்களை திருத்த முடியாது. இணையத்தில் நாம் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். தவறான தகவல்களை அவர்கள் பரப்பினால் அதற்கு பதிலடி கொடுங்கள். ஆனால் கழகத்தின் கொள்கைகள், செயல்பாடுகளை தாண்டி சென்று கருத்துக்களை கூற வேண்டாம். இடம் பொருள் இல்லாமல் பேச வேண்டாம். கொச்சையாக, அவதூறாக, ஆணவமாக பேச வேண்டாம். மத வாத சக்திகள்தான் இப்படி பேசுவார்கள்.

ஆணவம்
அவர்கள்தான் கொச்சையாக, அவதூறாக, ஆணவமாக பேசும் குணம் கொண்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தி பேசும் குணம் கொண்டவர்கள். நாம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். நாமே புதிய பிரச்சனைகளை உருவாக்க கூடாது. தொழில்நுட்பத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். நமது செயல்கள் அனைத்தும் ஆக்கபூர்வமாக, மக்களுக்கு நலன் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அசைன்மென்ட்
திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்டில், பல பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் படிப்பதை விட வாட்ஸ் ஆப் அதிகம் பார்க்கிறார்கள். இதெல்லாம் இணைய வளர்ச்சியால் ஏற்பட்டது. இது போன்ற இணைய வளர்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற ட்விட்டர் ஸ்பேஸ்களை இன்றோடு நாம் நிறுத்திக்கொள்ள கூடாது. தொடர்ந்து நடத்த வேண்டும். அறிவுப்பூர்வமான கருத்துக்களையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நாம் விவாதம் செய்ய வேண்டும்.

புத்தகம்
முக்கியமான நிகழ்விற்கு முன்பும் பின்பும் இது போன்ற ஸ்பேஸ்களை நடத்தலாம். நம் மீதான அவதூறுகளுக்கு ஏற்கனவே நம்மிடம் பதில்கள் உள்ளன. நம்முடைய சாதனைகளுக்கு ஏற்கனவே நம்மிடம் ஆவணங்கள் உள்ளன. திராவிட இயக்கங்களின் சாதனைகள் ஆவணம் செய்யப்பட்டு புத்தகங்களாக வெளி வந்துள்ளன. இதை இணையத்தில் பெருவாரியாக கொண்டு செல்ல வேண்டும். எழுத்தாற்றல் உள்ள திமுகவின் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள். அமேசான் இ புத்தகம் தொடங்கி பல வாய்ப்புகள் உள்ளன. அதில் நம் சாதனைகளை எழுதி பரப்புங்கள்., என்று ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications