மழையால் தொடர் விடுமுறை.. 10, +2 பொதுத் தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பொது தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்புக்கு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.

12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி தேர்வு முடிவுகளும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டன. அதேபோல, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மழை, வெள்ளத்தால் ஏராளமான மாணவ மாணவிகள் நோட்டு, புத்தகங்களை இழந்துள்ளனர். இந்நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில், திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறுமா அல்லது தள்ளிப் போகுமா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சந்தேகம் நிலவி வருகிறது.
இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை இன்று வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. தென் மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு, பள்ளிகள் திறக்கப்படும். அதன்பிறகு மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும். 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. திட்டமிட்ட தேதிகளில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications