10 நாள்தான் கெடு.. தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவில் எங்கள் வேலைகள் இருக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: திமுக அரசுக்கு 10 நாட்கள் கெடு கொடுப்பதாகவும், அதற்குள்ளாக, அனைத்து நாட்களும் கோவில்களை திறந்து வைக்க அனுமதிக்காவிட்டால், அரசே ஸ்தம்பிக்கும் வகையில் எங்கள் வேலைகள் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கோயில்களை அனைத்து நாட்களும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் அரசுக்கு எதிராக இன்று தமிழகம் முழுக்க 12 பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
கராத்தே தியாகராஜன், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் உள்ளிட்டோர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சினிமா தியேட்டர்கள்
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களை மூடி வைத்து விட்டு மற்ற நாட்கள் திறந்து விடுவோம், ஏன்னா அப்போதான், சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் அதிகம் போய், நீங்கள் தயாரிக்கும் படத்தை பார்ப்பார்கள் என்ற டிராமாவையெல்லாம் விட்டு விட்டு, கோவில்களை முழுமையாக திறக்க திமுக அரசு முன்வர வேண்டும். 10 நாட்களில் இதை செய்யா விட்டால் நாங்கள் சிறைக்கு செல்லக் கூட கவலைப்பட போவது கிடையாது.

நவராத்திரி நேரம்
தேவையில்லாமல் இறைநம்பிக்கையின் கை வைக்காதீர்கள். நவராத்திரி தமிழ் மக்கள் அனைவரும் கோவில்களுக்கு செல்லக் கூடிய பண்டிகையாகும். ஆனால், தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை போன்ற நாட்களில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. எந்த ஒரு லாஜிக்கான காரணம் இல்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள்.

திமுக சித்தாந்தங்களை திணிக்க முயற்சி
நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தபோது சொல்லியதைதான் இப்போதும் சொல்கின்றோம். ஒரு எதிர்க்கட்சியாக ஆளுகின்ற அரசு செய்கின்ற நல்ல மக்கள் பணிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்போம். ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அவர்களுடைய சித்தாந்தங்களை மக்களுடைய பூஜை அறையிலே திணிக்க முற்படும் பொழுது அது மக்கள் போராட்டமாக மாறும்.

பள்ளிகள் திறக்க ஆதரவு
ஒருபுறம் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அரசு கூறியபோது நாங்கள் ஆதரவு அளித்தோம். ஆனால் சினிமா தியேட்டர் ஓபன் செய்றோம் என்றபோது எங்களுடைய கண்டனக் குரலை கொடுத்தோம். கோவில் திறக்காமல் இருப்பதற்கு, ஒரு காரணம் சொல்றீங்க. ஆனால் சினிமா தியேட்டரை திறப்பதற்கு நீங்கள் சொல்கின்ற காரணம் விசித்திரமாக இருக்கிறது.

திமுக மாற்றி பேசுகிறது
எதிர்க்கட்சியாக இருந்த பொழுது டாஸ்மாக் திறந்தால் கொரோனா பரவும் என்றது திமுக. ஆளும் கட்சியாக வந்த பிறகு, டாஸ்மாக்கை திறந்து வைத்துள்ளது. தேவைப்படும் போது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதும், தேவை இல்லாதபோது மத்திய அரசை மோசமாக விமர்சிப்பதும் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். மத்திய அரசு சுற்றறிக்கை விட்டதாகவும் எனவே கோவில்களை திறக்கவில்லை என்கிறார்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மத்திய அரசு கூறுவதை ஏற்க கூடாது, மாநில சுயாட்சிதான் முக்கியம் என்று கூறினார்கள். எனவே இவர்கள் நோக்கம் கோவில்களை மூடுவதுதான். இன்னும் 10 நாட்கள் மாநில அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறோம். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் மட்டுமல்ல அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு எங்கள் வேலைகள் இருக்கும். அதை அரசு பார்க்கத்தான் போகிறது. மக்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை எச்சரித்தார். இந்த போராட்டத்தின்போது, "என்னை வழிபட அனுமதி.." என்று முருகபெருமான் கூறுவதை போல கட்அவுட்டுகளை பாஜகவினர் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது.

வானதி சீனிவாசன் போராட்டம்
இதேபோல, அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குளவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் திறக்க அனுமதி பள்ளிகள் அனுமதி ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்திம் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் தீ சட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications