கட்டி கட்டியாய் தங்க பிஸ்கட்! கிலோ கிலோவாய் உருகிய தங்கம்! பஸ்ஸில் ரூ.10 கோடி நகையால் திகைத்த மக்கள்
சென்னை: தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க, அது தொடர்பான திருட்டு சம்பவங்களும் பெருகி வருகின்றன.. வீடு புகுந்து நகை திருட்டு, நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களில் தமிழக போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு, குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். ஆனால், வெளிமாநில கொள்ளையர்களும் தமிழகத்துக்குள் புகுந்து கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. சென்னையில் அப்படியொரு சம்பவம்தான் நடந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர்கள், குணவந்த், மகேஷ்.. இவர்கள் இருவரும் தங்க நகை கடை விற்பனை பிரதிநிதிகள் ஆவர்..

கடந்த மாதம் 8ம் தேதி கிலோ கணக்கில் தங்க கட்டிகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகை கடைகளில் விற்பனைக்கு தந்துவிட்டு, பிறகு திண்டுக்கல்லுக்கு வந்தனர்..
அங்கிருந்த ஒரு நகை கடையில் விற்பனையை முடித்துக்கொண்டு, மிச்சமிருந்த 10 கிலோ தங்க கட்டிகளுடன் கடந்த 13ம்தேதி சென்னைக்கு காரில் கிளம்பினார்கள்..
கிலோ கணக்கில் தங்க கட்டிகள்
ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் பிரதீப் கான் என்பவர்தான் காரை ஓட்டி வந்துள்ளார்.. சமயபுரம் அருகே நள்ளிரவு கார் வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் பிரதீப் கான் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.. உடனே காரிலிருந்த மற்றவர்களும் கீழே இறங்கினார்கள்..
அப்போது இவர்களது காரையே பின்தொடர்ந்து வந்த இன்னொரு காரிலிருந்து குபுகுபுவென ஒரு கும்பல் இறங்கியது.. இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர், மற்றும் காரிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்த 2 பேர் என மூவர் மீதும் கண்களில் மிளகாய் பொடியை தூவியது.. பிறகு, காரில் வைத்திருந்த 10 கிலோ தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் காரில் மறைந்தனர்..

ஓடும் பஸ்ஸில் கொள்ளையர்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த நகை வியாபாரிகள் இதுகுறித்து சமயபுரம் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இறுதியில், அந்த கும்பல் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் சமயபுரம் போலீசாரும் மத்திய பிரதேசத்துக்கு சென்று, அங்கு பதுங்கியிருந்த மங்கிலால் தேவாசி என்ற 22 வயது நபரையும், விக்ரம் ஜாட் என்ற 19 வயது நபரையும் கைது செய்தனர்.. இவர்கள் இருவருமே ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
தங்க பிஸ்கட்டுகள்
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, ரகசிய உளவாளி மூலம் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் மத்திய பிரதேசத்தின் பர்வானிக்கு செல்லும் ஒரு பஸ்சில் இவர்கள் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.. உடனே அந்த பஸ்சில் ஏறி 2 பேரையும் கைது செய்தோம்.
அவர்களிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 1 நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள்,1 செல்போனை பறிமுதல் செய்தோம். அதற்குள், கொள்ளையடித்த தங்க கட்டிகள் சிலவற்றை தங்க பிஸ்கட்டுகளாக உருக்கி வைத்திருந்தனர். அவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications