“என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...” மனைவி ஸ்வாதிகா செயலால் நடிகர் பிரேம் எமோஷனல் பதிவு
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்வாதிகாவுக்காக அவரது கணவர் நடிகர் பிரேம் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படம் வெளியான பிறகு ரசிகர்களும் பிரபலங்களும் ஸ்வாதிகாவின் நடிப்பை பாராட்டி வரும் நிலையில், அனைவரையும் விட அதிகமாக பெருமிதப்பட்டவர் அவரது கணவர் பிரேம் தான்.

நடிகர் பிரேம் ஜேக்கப் பதிவு
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வாதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த பிரேம், மனைவியின் உழைப்பை நினைத்து உருக்கமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சசி சார் இந்த படத்தின் கதையை முதன்முதலில் சொன்னபோது நீ எவ்வளவு சந்தோஷமாக என்னை அழைத்து பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது. செல்வி கதாபாத்திரத்தை உயிரோடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நீ எவ்வளவு உழைத்தாய் என்பதையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கதாபாத்திரத்திற்காக ஸ்வாதிகா பல புதிய விஷயங்களை முயற்சி செய்ததாகவும், சுற்றியிருந்த மனிதர்களின் நடத்தை, பேச்சு, உடல்மொழி என அனைத்தையும் கவனித்து அந்த கதாபாத்திரத்தை இயல்பாக மாற்ற முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"சில நேரங்களில் வீட்டிலேயே சேலை கட்டிக்கொண்டு செல்வியாக மாறி விடுவாய். நான் அருகில் இருந்தாலும் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரமாட்டாய். அதைப் பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்" என்று பிரேம் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு நடைபெற்ற கள்ளக்குறிச்சியில் இருந்து இரவு நேரங்களில் போன் செய்து, "நான் இன்னும் நன்றாக செய்ய வேண்டும்... இந்த கேரக்டரை சிறந்த வடிவமாக மாற வேண்டும்" என்று ஸ்வாதிகா அடிக்கடி கூறியதாகவும் அவர் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
மனைவியின் அர்ப்பணிப்பை பாராட்டிய பிரேம், "என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த நடிப்புகளில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் நீ ரசிகர்களை சிரிக்க வைத்தாய், அழ வைத்தாய், உணர்ச்சிவசப்பட வைத்தாய். இது உன் கேரியரில் மறக்க முடியாத நடிப்பாக இருக்கும். ஆனால் இதுவே உன் உச்சம் அல்ல. இன்னும் பெரிய கதாபாத்திரங்கள் உன்னை தேடி வரும். அப்போது நீ இன்னும் பெரிய உயரத்தை அடைவாய்" என்று எழுதியுள்ளார்.
இறுதியில், "கண்களில் கண்ணீருடன்... ஆனால் பெருமிதமான புன்னகையுடன் இதை எழுதுகிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என் அன்பே" என்று முடித்திருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஸ்வாதிகாவும் அதற்கு பதில் அளித்துள்ளார்.
ஸ்வாசிகா பதில்
"எப்போதும் என்னை புரிந்து கொண்டு, ஆதரவாக இருந்ததற்கு நன்றி. நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு எல்லாமே அழகாக மாறிவிட்டது. நீ எனக்கு ஒரு பாதுகாப்பு தேவதை மாதிரி. உன்னை பெற்றது என் அதிர்ஷ்டம். லவ் யூ கணவா" என்று அவர் பதில் அளித்துள்ளார். இந்த கணவன்-மனைவி உரையாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சீரியலில் தொடங்கிய காதல்
ஸ்வாதிகா மற்றும் பிரேம் இருவரும் மலையாள தொலைக்காட்சி உலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள். ஒன்றாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவர்களுக்குள் நட்பு உருவாகி, பின்னர் அது காதலாக மாறியது.
பல வருட புரிதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் தம்பதிகளில் ஒன்றாக மாறியது.
தமிழிலும் தனி ரசிகர்கள்
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பிரேமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீ நான் காதல்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
அதன்பிறகு தற்போது ஒளிபரப்பாகி வரும் 'அழகே அழகு' சீரியலிலும் நடித்து வருகிறார். அவரது இயல்பான நடிப்புக்கும், மென்மையான திரைபடிமத்திற்கும் ரசிகர்கள் ஏராளம்.
மறுபுறம் ஸ்வாதிகாவும் மலையாள திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகையாக திகழ்கிறார். குணச்சித்திர வேடங்கள் முதல் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் வரை பல்வேறு வேடங்களில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இது காதல் இல்லை பெருமை
பொதுவாக சினிமா உலகில் வெற்றியை கொண்டாடும் பதிவுகள் பல வெளியாகும். ஆனால் மனைவியின் வெற்றியை தன்னுடைய வெற்றியாக நினைத்து, அவள் செய்த ஒவ்வொரு உழைப்பையும் நினைத்து கண்களில் கண்ணீர் வருமளவுக்கு பெருமைப்படும் கணவரின் பதிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
அதனால் தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும்,"நூறு சாமி வெற்றியை விட பிரேம்-ஸ்வாதிகா காதல் தான் மனதை வென்றுவிட்டது", "ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும்", "இது காதல் இல்லை... ஒருவரின் கனவை இன்னொருவர் கொண்டாடும் அழகான உறவு" என்று வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications