எண்ணூரில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்த போது, 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறுகையில், எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மின்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications