100000 வருட பழைய கைக்கோடரி டூ ஆளுநரின் கோச் வண்டி! மெட்ராஸ் 385: அழியா சின்னங்கள்!
சென்னை: எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மெட்ராஸ் 385 ஆவது பிறந்தநாளை ஒட்டி மிகச் சிறப்பான கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னைக்கு 385 வயதாகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அரிய வகையான பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு 'மெட்ராஸ் ரீ விசிட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இக்கண்காட்சி மீண்டும் நடைபெறுகிறது.

இங்கே தமிழர் நாகரிகத்தைப் படம்பிடித்துக் காட்டும் பல பொருட்கள் கண்களுக்கு விருந்தாக வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சோழர் காலம், பல்லவர் காலம், விஜயநகர பேரரசு எனப் பலர் ஆட்சி புரிந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியும் நடைபெற்றுள்ளது. அந்தக் காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகவே மெட்ராஸ் மாகாணம் இருந்துள்ளது.
அந்தக்கால ஆளுநரால் பயன்படுத்தப்பட்ட கோச்சு வண்டி ஒன்றும் கவனத்தை ஈர்க்கும்படி இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை 1964இல் சென்னை அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இந்த வண்டிக்கு இரண்டு கதவுகள் உள்ளன. அதில் தமிழக அரசின் சின்னம் வரையப்பட்டுள்ளது. அதன் கம்பீரத்தைப் பார்க்கும்போதே 100 ஆண்டுக்காலத்திற்குப் பின்னால் சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

சோழர், பல்லவர் எனப் பழங்கால நாணயங்கள், கருவிகள், தோல் பாவை பொம்மைகள், இசைக் கருவிகள், அளவீட்டுக் கருவிகள், பெட்ரோமாக்ஸ் லைட், அரிக்கேன் விளக்கு என இங்கே பல உள்ளன. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கூட உள்ளன. கூட 200 ஆண்டுக்காலத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதைப் போன்ற புகைப்படங்கள் கூட இருக்கின்றன.
இதேபோன்று முதலை, ஆமை, லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையான டைனோசர் எனப் பல உயிரினங்களைப் பதப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையான கல் மரம் கூட இங்கே காட்சிக்கு உள்ளன. இந்தக் கண்காட்சி குறித்து அருங்காட்சியக காப்பாட்சியாளர் திவ்யா, "1 லட்சம் ஆண்டுகள் பழமையான கைக்கோடரி உள்ளன. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தாழி மற்றும் பானைகள் உள்ளன. இவை எல்லாம் பல்லாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டவை. பித்தளை, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கற்சிற்பங்கள் உள்ளன. மேலும் பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் வைத்துள்ளோம்" என்கிறார்.
இவை தவிர இங்கே 10 ஆயிரத்திற்கும் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் சென்னையை மையமாக கொண்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இதைப் போன்ற கண்காட்சியின் போதுதான் இவற்றை காண்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தருகிறது. மற்ற காலங்களில் முழுமையாக இந்தப் பொருட்களை, வரலாற்று சின்னங்களைக் காண முடியாது. எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பார்ப்பதற்காக ஆர்வத்துடன் வருகை தந்து வருகின்றனர்.

"இதுவரைக்கும் இதே போன்ற பொருட்களை நான் நேரில் பார்த்ததே இல்லை. முதல் உலகப் போரின் போது சென்னை மீது போடப்பட்ட குண்டு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. முதலை ஒன்று உயிருயுடன் இருப்பதைப் போலவே இருக்கிறது. சென்னை எவ்வளவு ஓல்டு சிட்டி என்பதை போட்டோகிராஃப்ஸ் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்" என்கிறார் சிறுமி தர்ஷினி. இவரது தாய் சந்தியா கூட இதுவரை இவ்வளவு பழமையான பொருட்களைப் பார்த்ததே இல்லையாம். சென்னையிலேயே சில தலைமுறைகளாகப் பிறந்து வளர்ந்த இந்தக் குடும்பத்திற்கு இது ஆச்சரியம் தரும் கண்காட்சியாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications