உதயநிதி ஸ்டாலின்தான் லாஸ்ட்.. இனி அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்ய முடியாது.. 15% ரூல்ஸ்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் தான் 15 சதவீத சட்ட விதிப்படி இனி தமிழ்நாட்டில் புதிதாக ஒருவர் அமைச்சர் பதவியை பெற முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியடைந்தது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து தமிழ்நாட்டில் துறை வாரியாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஸ்டாலினை சேர்த்தால் தமிழ்நாட்டின் அமைச்சரவை என்பது 34 பேருடன் செயல்பட்டு வந்தது. இதில் திமுகவின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கேஎன் நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மே மாதம் 7 ம் தேதி பதவியேற்று கொண்டனர்.

அமைச்சரான உதயநிதி
அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்ச்சையில் சிக்கிய ராஜகண்ணப்பன் துறை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. அதுதவிர்த்து வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய அமைச்சராக ஸ்டாலினின் மகனும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு திட்ட அமலாக்க இலாக்காவும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினுடன் சேர்த்து 35 அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் (19 மாதம்) தாண்டும் நிலையில் தான் தற்போது முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சரான உதயநிதியால் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்போரின் எண்ணிக்கை அவரோடு சேர்த்து 35 ஆக அதிகரித்துள்ளது.

புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
தற்போதைய சூழலில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சென்னை உள்பட பெரும்பலான மாவட்டங்ளை சேர்ந்த திமுகவின் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக உள்ளனர். இருப்பினும் தென்காசி, திருநெல்வேலி, கோவை, சேலம், தேனி மற்றும் டெல்டா சில மாவட்டங்களில் எம்எல்ஏக்களாக உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்னும் காலியிடம் உள்ளதா? அல்லது அமைச்சரவை முழுவதுமாக நிரம்பி உள்ளதா?, புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

15 சதவீத ரூல்
அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் அமைச்சர்கள் நியமனம் செய்யவும் சட்டவிதிகள் உள்ளன. இதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 91வது திருத்தம் உறுதி செய்கிறது. இந்த திருத்தம் 2004ல் அமலுக்கு வந்தது. அதன்படி மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர்களின் எண்ணிக்கை என்பது இந்த திருத்தத்தில் உள்ள அம்சத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ஒவ்வொரு மாநில சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டாமல் அமைச்சர்கள் நியமனம் செய்யலாம்.

35 பேர் நிரம்பிவிட்டது
அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 15 சதவீதம் என்றால் தமிழ்நாட்டில் 35 பேர் அமைச்சர்களாக இருக்கலாம். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் உள்பட 34 பேர் முதலமைச்சர்களாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது உதயநிதி 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் அமைச்சரவை என்பது100 சதவீதம் அதாவது முழுவதுமாக நிரம்பி உள்ளது. இனி யாரையாவது புதிதாக அமைச்சராக்க ஸ்டாலின் விரும்பினால் தற்போதைய அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications