என்ஜினியரிங் படிப்புகளுக்கு அதிகரித்த மவுசு.. இந்த ஆண்டு 2.48 பேர் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக் இடங்களில் சேர்வதற்கு 2,48,848 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த மே 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து விண்ணப்ப பதிவு துவங்கியது. பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. மே 6 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர். மேலும், தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 6) வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின்படி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12 ஆம் தேதி ஆகும்.
வரும் ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, அதன் பிறகு ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனிலேயே நடைபெறும். பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்படும்.
கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் பொறியியல் பக்கம் திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications