2 ரிப்போர்ட்.. 3வது நீதிபதியிடம் துஷார் மேத்தா வாதம்.. என்.ஆர்.இளங்கோ கோரிக்கை ஏற்பு! என்ன நடந்தது?
சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டபடியே செவ்வாய்க்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

மாறுபட்ட தீர்ப்புகள்: கடந்த புதன்கிழமை இந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் இருவரும் தீர்ப்பு வழங்கினர். 2 நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷாபானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அவர் 10 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.
3வது நீதிபதி: ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் இருவரும் பரிந்துரை செய்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நேற்று பிற்பகல் 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் சார்பாக ஆஜராகி வாதம் செய்வதற்காக வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கக் கோரினார் என்.ஆர்.இளங்கோ.
2 அறிக்கைகள்: அதேசமயம், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டல் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இதையடுத்து, இந்த வழக்கை அடுத்து எப்போது விசாரிப்பது என்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதியம் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு மீண்டும் 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நேற்றே உத்தரவிட்டபடி, அமலாக்கத்துறை சார்பிலும், செந்தில் பாலாஜி மனைவி சார்பிலும் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
துஷார் மேத்தா vs என்.ஆர்.இளங்கோ: அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவலில் இருந்த காலமாகக் கருத முடியாது" என வாதிட்டார். அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது பற்றி விளக்கி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
2 தரப்பும்: இதையடுத்து நீதிபதி, "யாரும் ஆவணங்களைப் பார்க்காத நிலையில் கைதுக்கான காரணம் திருத்தப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வழக்கு விசாரணை நடைபெறும். 11 ஆம் தேதி செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்கலாம். 12 ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை முன்வைக்கலாம்." எனக் கூறி வழக்கு விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.
செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டபடி இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையே (ஜூன் 11) விசாரணைக்கு வரவுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 11ஆம் தேதி ஆஜராகி வாதங்களை அடுக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications