சமைக்காத கேரட்டை சாப்பிட்ட 2 வயது குழந்தை.. சிறிது நேரத்தில் நடந்த துயரம்! சென்னையில் சோக சம்பவம்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சமைக்காத கேரட்டை சாப்பிட்ட 2 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருக்கிறார். விக்னேஷ் - பிரமிளா தம்பதிக்கு 2 வயதில் லித்திஷா என்ற மகள் உள்ளார். வயதுக்கேற்ற குறும்பு மற்றும் சுட்டித்தனத்துடன் விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷாவை அவரது பாட்டி வீட்டிற்கு தாய் பிரமிளா அழைத்து சென்றுள்ளார்.

கொருக்குப் பேட்டையில் உள்ள வீட்டிற்கு பிரமிளா குழந்தை லித்திஷாவுடன் சென்றிருந்தார். இந்த நிலையில், அங்கு விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, சமைக்காத கேரட் துண்டை சாப்பிட்டுள்ளார். விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா கேரட், தொண்டையில் சிக்கிய நிலையில் மயங்கி விழுந்தாள். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த லித்திஷாவின் தாயார் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தார்கள். இதன்படி, குழந்தையை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனைக்கேட்டதும் பெற்றோர்கள் கதறி துடித்தனர். கேரட் தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உயிரிழந்த தகவல் குறித்து அறிந்ததும், அங்கு வந்த கொருக்குப் பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளை 5 வயது வரையிலும் மிக கவனமாக பெற்றோர்கள் பார்க்க வேண்டியது அவசியம். எதுவும் அறியாத அந்த வயதில் குழந்தைகள் கவனக்குறைவாக தரையில் கிடக்கும் பொருட்களை எடுத்து விழுங்கிவிடும். இதனால் குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தாக முடிந்து விடும். இதனால், பெற்றோர்கள் மிக கவனமாக சிறு வயது குழந்தைகளை பார்த்துக்கொள்வது அவசியம் என்றும் குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications