5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே!
சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதுவும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை பெற்று, எதிர் வேட்பாளரை தோற்கடித்தனர். அந்த வகையில் தியாகராய நகர், மொடக்குறிச்சி, தென்காசி உள்ளிட்டவற்றில் வெறும் 200 கீழ் தான் வாக்கு வித்தியாசம் இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யார்? அவர்கள் பொற்ற வாக்குகள்? வித்தியாசம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவற்றோடு போட்டியிட்டது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருந்தன. அமமுக, எஸ்டிபிஐ, தேமுதிக ஆகியவை தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்தே தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களை பார்க்கலாம்..

1.தியாகராய நகர் தொகுதி
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜே.கருணாநிதி 56 ஆயிரத்து 35 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்யநாராயணன் 55,898 வாக்குகள் பெற்றார். இதில் வெறும் 137 வாக்கு வித்தியாசத்தில் அதாவது 0.10% என்ற வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார்.
2. மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி (Modakkurichi) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.சரஸ்வதி 78,125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,884 வாக்குகளை பெற்றிருந்தார். வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றி பெற்றார். இது 0.15% என்பது குறிப்பிடத்தக்கது.
3.தென்காசி
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எஸ்.பழனி நாடார், 89, 315 வாக்குகள் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் 88,945 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றார். இது மொத்த வாக்கு பதிவு சதவீதத்தில் 0.17% சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது
4.மேட்டூர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவேட்பாளர் எஸ். சதாசிவம் 97,055 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் எஸ். ஸ்ரீனிவாசபெருமாள் 96,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 656 வாக்குகளாகவும், வாக்கு சதவீதம் 0.30% ஆகவும் இருந்தது.
5.காட்பாடி
திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் 85,140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் வி.ராமு 84,394 வாக்குகள் மட்டுமே பெற்றார். வாக்கு வித்தியாசம் 746 ஆகவும், வாக்கு சதவீதம் 0.40 ஆகவும் இருந்தது
6.கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரான கே அசோக்குமார் 96,050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான செங்குட்டுவன் 95, 756 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 794 ஆகவும், வாக்கு சதவீதம் 0.38 ஆகவும் இருந்தது.
7.விருத்தாசலம்
விருதாச்சலம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம் ராதாகிருஷ்ணன் 77,64 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரான ஜெ கார்த்திகேயன் 76,202 வாக்குகள் பெற்றிருந்தார். இவர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 862 ஆக இருந்தது. இது பதிவான வாக்குகளில் 0.44% என்பது குறிப்பிடத்தக்கது.
8.நெய்வேலி
நெய்வேலி தொகுதியில் திமுக சார்பில் களம் கண்ட ஆர்.சபா ராஜேந்திரன் 75 ஆயிரத்து 777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கே.ஜெகன் 74 ஆயிரத்து 200 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 977 ஆகவும், வாக்கு சதவீதம் 0.60% ஆகவும் இருந்தது
* 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை 100 முதல் 1000 வாக்குகளுக்கு உள்ளாக தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் கிணத்துக்கடவு, ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு வித்தியாசம் ஆயிரத்திலிருந்து 2000த்திற்குள் இருந்ததும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications