பாரிவேந்தருக்கு பாஜக கூட்டணியில் சீட்.. மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி முழு வீச்சில் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டிலும், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. திமுகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து தொகுதிகளை அறிவித்து உள்ளது.

மறுபக்கம் எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில், அதிமுகவால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாஜகவும் தனியாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஐஜேகே கட்சி 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வழங்கியது. இதுகுறித்து ஐஜேகே கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் வெளியிட்ட அறிவிப்பில், "மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 24 விருப்ப மனுக்களை பெறலாம்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், திருச்சியின் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஐஜேகே அலுவலகத்திலும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 29 ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்று வரும் மார்ச் 1 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் பேட்டியளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications