ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்தார்.. உதயநிதி என்ன செய்தார்.. 2026ல் முடிவு கட்டுவோம்.. எடப்பாடி அட்டாக்
சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும். மு.க ஸ்டாலினாவது 20 ஆண்டுகள் உழைத்தார். ஆனால் உதயநிதி என்ன செய்தார். அவருக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- திமுக என்றால் அது ஒரு குடும்ப கட்சி. திமுக ஒரு கார்ப்ரேட் கம்பெனியாக மாறிவிட்டது. அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி முதல்வராகவும், திமுகவின் தலைவராகவும் இருந்தார். அதன்பிறகு தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருக்கிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர். திமுகவில் கட்சிக்காக பாடுபட்டவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் திமுகவில் வேறு மூத்த தலைவர்கள் இல்லையா? அவர்கள் எல்லாரும் கட்சிக்காக உழைக்க வில்லையா.. பாடுபடவில்லையா..
அதிகாரம் என்று சொன்னால் கருணாநிதி குடும்பம். அங்கு உழைப்பவர்களுக்கு உரிமை கிடையாது. திமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் என்று கூறியிருந்தால், மூத்த அமைச்சர்கள் பல பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாம். உதயநிதி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். எதோ விபத்தின் காரணமாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். எம்எல்ஏவாக இருக்கும்போதே அமைச்சர் போல் காண்பித்தனர்.
அடுத்து அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்போது துணை முதல்வர் ஆகிவிட்டார். ஸ்டாலின் கட்சிக்காக 20 ஆண்டுகள் உழைத்தார். இதை நாங்க மறுக்கவில்லை. ஆனால் எந்த ஒரு விதத்திலும் கட்சிக்கு பாடுபடாத உதயநிதிக்கு பட்டாபிசேகம் செய்து இருக்கிறார்கள். மன்னராட்சி நடத்துகின்றனர். ஏற்கனவே மன்னராட்சி நாட்டிலே அகற்றப்பட்டுவிட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திமுகவையும், பாஜகவையும் விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறுகையில், "மக்களுக்காக பணியாற்றிய, உழைத்த அதிமுகவை விஜய்யால் எப்படி விமர்சிக்க முடியும். அதிமுக குறித்து விஜய் பேசாமல் இருப்பது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications