அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு - சென்னையில் தொடங்கி வைத்தார் சேகர்பாபு
அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் இலவச உணவு சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்கும் சேவையை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேலையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா அலை தீவிரமாக வீசி வருகிறது. தமிழகத்தில் நேற்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 20,904 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 15,880 பேர் மரணமடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,09,237 ஆக உயர்ந்துள்ளது. 20,904 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,40,968 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 67 உயிரிழந்துள்ளனர்.

குவியும் நோயாளிகள்
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் மருத்துவமனைகளில் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

24 மணிநேர உணவு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரு வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24மணிநேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சர் சேகர்பாபு
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , 24 மணி நேர இலவச உணவு சேவையை தொடங்கி வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் விரைவில்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேலையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications