திமுகவை சுற்றிய 3 சூறாவளிகள்.. பொன்முடி விவகாரம்தான் "டாப்".. ஸ்டாலின் எடுக்க போகும் கசப்பான முடிவு?
சென்னை: அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு திமுகவில் 3 சூறாவளிகளை ஏற்படுத்தி உள்ளதாம்.
நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.
பொன்முடி வழக்கு: குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில்,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
3 சூறாவளிகள்: திமுகவை தற்போது 3 சூறாவளிகள் சுற்றி வருகின்றன.
1. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். திமுகவின் டாப் அமைச்சர் என்று கூறப்பட்ட அவர் சிறையில் இருக்கிறார். இது திமுகவிற்கு பிரஷராக இருக்கிறது.
2. அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிட்டது. திமுக வரலாற்றில் முதல்முறை ஒரு அமைச்சர் பெரிய தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது கண்டிப்பாக திமுகவிற்கு பெரிய பின்னடைவுதான்.
3. புயல் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது ஒரு எதிர்ப்பு அலை ஏற்பட்டு உள்ளது. மக்கள் கொஞ்சம் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
ஸ்டாலின் கசப்பான முடிவு: இந்த விவகாரங்கள் காரணமாக முதல்வர் ஸ்டாலின் சில கசப்பான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளன. நாளை பெரும்பாலும் முழு அமைச்சரவை மாற்றங்கள் இருக்கும். மொத்தமாக அமைச்சரவை மாற்றப்படலாம். பல பொறுப்புகள் மாற்றப்படலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications