யாரும்மா நீங்க.. 197 பவுன் தங்கம்,கையிலேயே 27 லட்சம்.. கோடி கோடியாய்.. சென்னை பருப்பு கம்பெனியே காலி
சென்னை: சென்னையில் பருப்பு கம்பெனியில் 3 பெண் ஊழியர்கள் சேர்ந்து 2½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி உள்ளார்கள். இதில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஊழியர் உள்பட 3 பெண் ஊழியர்களும் வசமாக சிக்கி கொண்டுள்ளனர்.
கம்பெனியில் நேர்மையாக இருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், கம்பெனி பணத்தை கையாடல் செய்வது அவ்வப்போது எங்காவது நடந்துக்கொண்டு தான் வருகிறது. அஜாக்கிரதையாக இருந்தால் கம்பெனியையே மொத்தமாக ஆட்டையை போடுபவர்களும் இருக்கிறார்கள். சென்னை திருவொற்றியூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் கடந்த 10 வருடங்களாக கணக்கு பார்த்து வந்த சரண்யா (வயது 32), பிரதீபா (36) மற்றும் திவ்யா ஆகிய 3 பெண் ஊழியர்கள் கணக்கு பார்த்து வந்துள்ளார்கள்.
அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கம்பெனி பணத்தை கையாடல் செய்து விட்டனர். ரூ.2½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகார் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவிற்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ராஜசேகரன் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.2½ கோடி சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பேரில் ஊழியர்கள் சரண்யா, பிரதீபா ஆகிய இருவரும் கைது செய்தனர்.
திவ்யா நிறைமாத கர்ப்பமாக இருப்பதால், அவரை கைது செய்யவில்லை. ஆனால் அவர் மீது வழக்கு உள்ளது. மேற்கண்ட 3 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் ரூ.27½ லட்சம் ரொக்கப்பணம், 197 பவுன் தங்க நகைகள், ரூ.67 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்போன்கள் போன்றவை கைப்பற்றி உள்ளார்கள். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications