6 மணி நேரத்தில் 3 சம்பவங்கள்! சீறிய டி.ஆர் பாலு.. சட்டென போய் ஆளுநரை பார்த்த முதல்வர்! நடந்தது என்ன?
சென்னை: நீட் தேர்வு மசோதா இன்னும் ஆளுநர் முன் நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ரவியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. முதல்முறை தமிழ்நாடு அரசு அனுப்பிய தீர்மானத்தை .. இது சமூக நீதிக்கு எதிரானது என்று கூறி ஆளுநர் ரவி புறக்கணித்தார்.
மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய நிலையில், அதே தீர்மானத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. சட்டப்படி தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு உள்ளது.

நீட் விலக்கு
அந்த மசோதாவை ஆளுநர் நிராகரிக்க முடியாது. மாறாக கிடப்பில் போடலாம். அதன்படியே ஆளுநர் தற்போது நீட் எதிர்ப்பு தீர்மானம் மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் அதை கிடப்பில் போட்டு இருக்கிறார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்தும் கூட ஆளுநர் ரவி இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஆளுநர் ரவி கோவையில் நடந்த கூட்டம் ஒன்றில் தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். தேசிய கல்விக்கொள்கையை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்.

கல்வி எப்படி?
கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். ஒன்றியம் என்பது சட்டம் அல்லது இயற்கையாகவே இந்தியா நிலப்பரப்பு ரீதியாக ஒன்றியமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஆளுநர் தமிழ்நாடு அரசின் ஒன்றிய நிலைப்பாட்டை சாடிய நிலையில்தான் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தது. அதில், இந்திய யூனியன் பற்றி பேசுபவர்கள் இந்தியா 1947 ஆம் ஆண்டு பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவை போல ஒப்பந்த கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது என சொல்லி இருக்கிறார் தமிழக ஆளுநர்.

முரசொலி
பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன் இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை! அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை! இந்தியாவை இணைந்தது சர்தார் பட்டேல். இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்து சொல்லலாமா? என்று முரசொலி கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.

என்ன நடந்தது?
இதற்கு முன்பே திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக கட்டமான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டது. "'கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் முரசொலியில் இந்த கட்டுரை வெளியானது. நீட் மசோதா நிலுவையில் இருந்த சமயத்தில் ஜனவரி 29ம் தேதி இந்த கட்டுரை வெளியிடப்பட்டது. அதன்பின் சரியாக பிப்ரவரி 1ம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுனர் ஆர். என் ரவி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த முறை முடியாது
இப்போதும் அதேபோல்தான் முரசொலி ஆளுநருக்கு எதிராக தலையங்கம் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை ஆளுநர் தீர்மானத்தை திருப்பி அனுப்பி முடியாது. இன்று காலை இந்த முரசொலி தலையங்கம் வெளியான நிலையில் 6 மணி நேரத்திற்குள் ஆளுநரை முதல்வர் ஸ்டாலினும் நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். நாங்கள் அனுப்பிய 7 தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றவில்லை. சட்டப்படி இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது உங்கள் கடமை.

ஸ்டாலின் கோரிக்கை
நாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு. தீர்மானத்தை நிறைவேற்றுவது உங்களின் ஜனநாயக கடமை என்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாக தெரிகிறது. இங்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்த அதே நேரத்தில் டெல்லியில் ஆளுநருக்கு எதிராக திமுக எம்பி டிஆர் பாலு பேசிக்கொண்டு இருந்தார். மக்களவையில் பேசிய டிஆர் பாலு அவை ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்து பேசினார். அதில், நாங்கள் 7 தீர்மானங்களை தாக்கல் செய்தோம். அதை ஆளுநர் ஏற்கவில்லை.

டிஆர் பாலு சீற்றம்
மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அவர் என்ன காட்டாட்சி நடத்துகிறாரா. இது மோசமான நடவடிக்கை. இது விதி மீறல். அரசியல் சட்டப்படி நடக்க முடியாதவர் அங்கே இருக்க லாயக்கு இல்லை. உடனடியாக அவர் ரிசைன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு அவரை திருப்பி அழைக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை என்று குறிப்பிட்டார். காலையில் முரசொலி தலையங்கம்.. பிற்பகலில் முதல்வர் மீட்டிங்.. பின்னர் டி ஆர் பாலு பேச்சு என்று ஒரே நாளில் நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளது.. விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று திமுக அரசு அழுத்தம் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications