"தலை"க்கு தில்ல பார்த்தீங்களா.. அதே சின்னம் + அதே கொடி.. பதறும் எடப்பாடி.. எங்கே போய் முடிய போகுதோ
சென்னை: அதிமுக விவகாரம் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி தரப்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வரும்நிலையில், ஓபிஎஸ் தரப்போ தெம்பாக இருக்கிறதாம்.. என்ன காரணம்?
கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவை துண்டித்து, வேட்பாளரை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே முட்டல் - மோதலில் கூட்டணி உள்ள நிலையில், இந்த விவகாரம் இன்னும் சூடேற்றிவருகிறது.. தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக கிடைத்துவிட்ட நிலையில், படுகுஷியாக இருக்கிறது அதிமுக..
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்: இதனிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில், ஓபிஎஸ்ஸூம் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால், பரபரப்பு எகிறி வருகிறது.. கர்நாடக அதிமுகவில் சீனியரான புகழேந்தியின் ஆதரவை நம்பி ஓபிஎஸ் தேர்தலில் குதித்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால், கட்சியின் பெயர், சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது...
அதேபோல, சட்டரீதியான அடுத்தக்கட்டத்துக்கும் ஓபிஎஸ் தயாராகிவிட்ட நிலையில், அதன் முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை. இதற்கு நடுவில், ஓபிஎஸ்ஸின் மாநாடு பெருத்த எதிர்பார்ப்பை கிளறிவிட்டுள்ளது.. 24ம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்..
பின்னடைவு: இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்றும் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள் என்றும், இந்த திருச்சி மாநாடுதான், ஓபிஎஸ்ஸூக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்து, ஓபிஎஸ் தரப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, தன்னுடைய நகர்வில் புதிய அத்தியாயம் என்று கருதும் திருச்சி மாநாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது... காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போதே எச்சரிக்க துவங்கிவிட்டனர்.
கொடி, சின்னம்: அதாவது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும்.. எனவே, அதிமுக கட்சிக் கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று எடப்பாடியின் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் காட்டமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் வார்னிங் தந்துள்ளார்.
இப்படி நாலாபக்கமும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுழட்டி சுழட்டி எதிர்ப்பதால், ஓபிஎஸ் தரப்பு திருச்சியில் மாநாடு நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. ஆனாலும் ஓபிஎஸ் சரலையே.. திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி நிறைய பறக்க வேண்டும் என்று அதிரடியாக ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம்... அதன்படி, மாநாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா கட் அவுட்கள் வைக்கப்படும் என்று தெரிகிறது..
ஒருங்கிணைப்பாளர்: மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே போஸ்டர் விளம்பரங்களில் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார்கள். இன்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்தும் விசாரணையின் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புகள் வலம்வரும் சூழலில், ஓபிஎஸ்ஸின் தில் அரசியல் திகைக்க வைத்து வருகிறது.. அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தும்பட்சத்தில், எடப்பாடி என்ன செய்ய போகிறாரோ? இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? தெரியலையே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications