புதுக்கோட்டை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேர்! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: புதுக்கோட்டை வெடி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு;
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த (30-7-2023) அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து நபர்களில் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து, த/பெ.கருப்பையா (வயது 31) என்பவர் 3-8-2023 அன்றும், திருமலை, த/பெ. ஆறுமுகம் (வயது 30) என்பவர் 4-8-2023 அன்றும், வெள்ளனூரைச் சேர்ந்த சுரேஷ், த/பெ.பழனி (வயது 35) என்பவர் இன்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைரமணி, மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications