மது விற்பனையை விடுங்க.. தீபாவளி நாளில் ரூ.315 கோடிக்கு கறிக்கோழி விற்பனை.. கடந்த ஆண்டை விட 25% அதிகம்
சென்னை: தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக மழையும் லீவ் விட்டதால் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே சென்னை போன்ற நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை காண முடிந்தது.

காற்று மாசை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், கட்டுப்பாட்டை மீறி பல இடங்களில் பட்டாசுகள் வெடித்ததை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது.
அசைவ உணவு: தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி என இரண்டு நாட்களையும் சேர்த்து 464 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதேபோல், தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி பகுதியில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்த நிலையில் நடப்பு ஆண்டில் மேலும் ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்றுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது கறி விருந்துதான். தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் கறிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மக்கள் பட்டாசுகளை வெடித்து வீட்டில் கறிவிருந்துடன் உணவை ஒரு பிடி பிடித்தனர். தீபாவளி பண்டிகை நாளன்று கறி எடுத்து வீட்டில் அசைவம் எடுத்து சாப்பிடும் பழக்கம் தமிழகத்தில் அசைவ உணவு சாப்பிடுபவர்களின் மத்தியில் உள்ளது.
ரூ.315 கோடிக்கு விற்பனை: தீபாவளி அன்று கறி எடுத்து சாப்பிடவில்லை என்றால் அன்றைய தீபவளி முழுமை பெறாத மனநிலையே இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப ஆட்டுக்கறி, கோழிக்கறி என மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆட்டுக்கறியை பொறுத்தவைரை விலை அதிகம் என்பதால் , கோழிக்கறி விற்பனைதான் படு ஜோராக இருந்தது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கறிக்கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதலாக கோழிக்கறி விற்பனையாகியுள்ளது. தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications