ஸ்டாலின் இடைத்தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு இல்லை.. ஏன் தெரியுமா?
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தோல்வியைத் தழுவினார். திமுகவின் தலைவரான ஸ்டாலின், கொளத்தூரில் தொடர்ந்து மூன்று முறை வென்றிருந்தார். அவரே தோற்றுப்போனதை திமுக தலைவர்களால் ஏற்க முடியவில்லை.. அவரை எப்படியாவது மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் திமுகவினர். அண்மையில் கே.என்.நேரு போன்ற மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை மீண்டும் சட்டமன்றத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அதற்கான காரணங்களை பார்ப்போம்.
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளை தாண்டி வெல்வோம் என்று திமுக தலைமை நம்பியது. விஜய் எல்லாம் 2 அல்லது மூன்று சீட்டுகளில் தான் வெல்வார் என்று நம்பிக்கொண்டிருந்தனர் திமுகவினர். எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் எப்படியும் நல்ல வெற்றியை பெறுவோம் என்று நம்பியது. கருத்துக்கணிப்புகள் 99 சதவீதம் திமுகவிற்கு சாதகமாகவே இருந்தது. ஒரே ஒரு கருத்துக்கணிப்பு தான் தவெகவிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தார். இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

இந்த தேர்தலில் திமுகவின் பல்வேறு அமைச்சர்கள் தோற்றுப்போனார்கள். பல எம்எல்ஏக்கள் தோற்றுப்போனார்கள். திமுக தலைவர் ஸ்டாலினே கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் எதிர்பாராத வகையில் தோற்றுப்போனார். இந்த தோல்வி திமுக கனவில் கூட நினைக்காத தோல்வி.. ஸ்டாலின் எல்லாம் தோற்பார் என்று யோசித்து கூட தலைவர்கள் யாருமே பார்க்கவில்லை.. முதலமைச்சராக இருந்து ஸ்டாலின் தோற்றுப்போனதை திமுகவினரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்படியான நிலையில், அண்மையில் முதல்வர் விஜய் எங்கே உங்கள் அப்பாவை காணோம் இன்று விஎஸ் பாபு ஸ்டைலில் சட்டசபையில் கிண்டல் செய்தார். இதனால் கோபம் அடைந்த திமுக நிர்வாகிகள், வரும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் களம் இறங்க வேண்டும் என்றும், மீண்டும் சட்டசபைக்கு வர வேண்டும் என்றும் திமுகவினர் எல்லாருமே விரும்புகிறார்கள். திமுக மூத்த தலைவர் கேஎன் நேரு உள்பட பலரும் வெளிப்படையாக ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதனை ஸ்டாலின் ஏற்பாரா என்பது பெரிய கேள்வி என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..
ஏனெனில் இடைத்தேர்தலில் முடிவுகள் சாதகமாக வராமல் போனால், அது அரசியல் ரீதியாக மீள முடியாத அவமானமாக" மாறிவிடும் என்ற அச்சம் திமுக மேலிடத்திற்கு உள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருக்கும். அந்த வகையில் விஜய் தலைமையிலான த.வெ.க-விற்கு சாதகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அரசு இயந்திரம், ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர்கள் தான் ராஜினாமா செய்து ஆளும் கட்சியான தவெக சார்பில் போட்டியிடுகிறார்கள் போன்ற அனைத்தும் விஜய் அரசுக்குச் சாதகமாக இருக்கும்.
எனவே திமுக தலைவர் ஸ்டாலின் போன்ற ஒரு மூத்த தலைவர் அங்கே ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்காது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தோற்றால் அசிங்கம், ஜெயித்தால் "ஒரு எம்.எல்.ஏ பதவிதானே" என்ற நிலையே ஏற்படும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதுமட்டுமின்றி சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவர் தான் சட்டசபையில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசை கடுமையாக எதிர்கொள்கிறார். விஜய் vs உதயநிதி ஸ்டாலின் என்பதாக டிரெண்ட ஆக உள்ளது. இந்த நேரத்தில் ஸ்டாலின் மீண்டும் உள்ளே வந்தால் தலைமைப் பொறுப்பில் இரட்டை தலைமை என்பது போல் சிக்கலாகும். எனவே, ஸ்டாலின் தற்போதைக்கு நேரடியாகத் தேர்தலில் நிற்காமல், கட்சித் தலைவராக வெளியில் இருந்து கொண்டு ஒட்டுமொத்த இடைத்தேர்தல் வியூகத்தை மட்டும் வகுப்பதே பாதுகாப்பானது என்று நினைக்கவே வாய்ப்பு உள்ளதாம்.
முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் எழுப்பிய "உங்க அப்பா எங்கே?" என்ற கிண்டலான கேள்விக்கு, ஸ்டாலின் அண்மையில், "நான் சட்டமன்றத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மக்களின் இதயங்களில் எங்கும் நிறைந்திருக்கிறேன்.. மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்களில் நான் இருக்கிறேன்" என்றுதான் பதிலளித்தார். தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஸ்டாலின் கூறவே இல்லை.
ஒரு வேளை இடைத்தேர்தலில் மீண்டும் ஒரு தோல்வி என்பது ஸ்டாலினின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சிக்கலாகும்.. இடைத்தேர்தல்களில் நேரடியாகக் களம் இறங்குவதைத் தவிர்த்து, உதயநிதியை முன்னிறுத்தியே திமுகவின் பயணம் போகும் என்பதே அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.














Click it and Unblock the Notifications