"பாரதிராஜா சமாதியில் நின்று வைரமுத்து உருக்கம்... மணிமண்டபம் கட்ட முதல்வருக்கு கோரிக்கை!"
சென்னை: தமிழ் சினிமாவின் மண்ணின் மணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த பிறகும், அவரது நினைவுகள் ரசிகர்களின் மனதில் இன்னும் உயிருடன் வாழ்கின்றன. சில நாட்களுக்கு முன் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு இழப்புகளும் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்த நிலையில், பாரதிராஜா அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்குச் சென்று கவிஞர் வைரமுத்து செலுத்திய அஞ்சலியும், அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கவிஞர் வைரமுத்து பதிவு
பாரதிராஜா சமாதி முன் நின்றபடி வைரமுத்து எழுதிய வரிகள் பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளன. "இமயத்தைப் புதைத்த இடம் இதுதான்...
தூங்கு ராஜா தூங்கு...
ஓடி ஓடிக் களைத்தவனே...
கலையாத உறக்கத்தில் ஓய்வுகொள்...
நலம் கேட்க வந்த நான் நல்ல செய்தி கொண்டுவரவில்லை...
இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன்...
உனைத் தேடி வந்துவிட்டான்..." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிகளில், சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் தன்னுடன் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பாக்யராஜும் இப்போது உயிரிழந்து விட்டதை நினைத்து வைரமுத்து வேதனையை வெளிப்படுத்தியிருப்பது பலரையும் உருக்கியுள்ளது.

ஜோடி குதிரைகளை இழந்த கலைத்தேர்
பாரதிராஜா - பாக்யராஜ் கூட்டணியை நினைவுகூர்ந்த வைரமுத்து, "ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர்..." என்ற ஒரு வரியிலேயே தமிழ் சினிமா இழந்த இரண்டு மாபெரும் படைப்பாளிகளின் வெற்றிடத்தை உணர்த்தியுள்ளார். இந்த வரி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
"பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்..." அதுமட்டுமல்லாமல், "இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம் வேண்டும்... அதற்காக அரசிடம் கோரிக்கை வைப்பேன். தேவைப்பட்டால் முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்கவும் தயங்க மாட்டேன். இந்த இடம் கலைக்கோயிலாக மாறும் நாளில் தேனி மாவட்டமே பூச்சொரியும்..." என்று வைரமுத்து உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கருத்து வெளியான சில மணி நேரங்களிலேயே, "பாரதிராஜாவுக்கு அரசு சார்பில் நிரந்தர நினைவிடம் அமைக்க வேண்டும்", "அவரது படைப்புகள் தமிழர்களின் சொத்து", "அவருக்கு மணிமண்டபம் கட்டுவது காலத்தின் கடமை" என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
பல தசாப்தங்களை கடந்த நட்பு
பாரதிராஜா - வைரமுத்து உறவு வெறும் இயக்குநர், பாடலாசிரியர் உறவல்ல. பல காலமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நண்பர்களாகவும், தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் அன்பு கொண்ட படைப்பாளிகளாகவும் இருவரும் பிரபலமானவர்கள்.
பாரதிராஜாவின் பல படங்களில் வைரமுத்துவின் பாடல்கள் தனி அடையாளம் பெற்றன. கிராமிய வாழ்க்கை, காதல், மனித உணர்வுகள் என இருவரின் கலை உலகமும் ஒன்றோடொன்று கலந்திருந்தது.
உருக்கமான பதிவு
பாக்யராஜ் மறைந்தபோதும் வைரமுத்து வெளியிட்டிருந்த பதிவு பெரும் கவனம் பெற்றது. "பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா?" என்று தொடங்கிய அவரது பதிவு ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது.
இப்போது பாரதிராஜா சமாதியில் நின்று அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு, அந்த வேதனையை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் ஒரே கோரிக்கை
வைரமுத்துவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், "பாரதிராஜா போன்ற படைப்பாளிக்கு ஒரு மணிமண்டபம் கட்டுவது அரசு செய்ய வேண்டிய மரியாதை", "அவரது நினைவிடம் தமிழ்ச் சினிமாவின் வரலாற்று தலமாக பாதுகாக்கப்பட வேண்டும்", "அவரது கலை மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பாரதிராஜா உருவாக்கிய கிராமிய சினிமாவின் மண்வாசனையும், பாக்யராஜ் உருவாக்கிய திரைக்கதை உலகமும் இன்று தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் தூண்களாக நினைவுகூரப்படும் நிலையில், வைரமுத்துவின் இந்த உருக்கமான பதிவு ரசிகர்களின் மனதையும் மீண்டும் கனக்கச் செய்துள்ளது.














Click it and Unblock the Notifications