விஜய் ஆட்சி கவிழாது.. விசிக துணை நிற்கும்! தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்போம்.. திருமாவளவன் பேச்சு
சென்னை: விஜய்யின் தவெக ஆட்சி கவிழாது என்றும், 5 ஆண்டுகளுக்கும் நாங்கள் துணை நிற்போம் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் நாளை நடைபெற இருக்கும் தவெக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என்றும் திருமாவளவன் கூறினார். அதிமுகவில் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியிருப்பது அக்கட்சியில் பிரச்சனை இருப்பதை காட்டுகிறது" என்றார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை நடைபெற இருக்கும் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும். புதிதாக பொறுப்பேற்று ஆட்சி அமைத்து வரும் தவெக அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தவெக அரசு கவிழும் வாய்ப்பு இல்லை. 5 ஆண்டுகள் முழுமையாக தவெக ஆட்சியை நிறைவு செய்யும் வகையில் விசிக உறுதுணையாக இருக்கும்.. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவில் இருந்து அண்மையில் 6 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம் குறித்து பதில் அளித்த திருமாவளவன், "எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது, அதிமுகவுக்குள் கடுமையான உள்கட்சி பிரச்னைகள் இருப்பதற்கான அறிகுறி. அந்தக் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அங்கு இருந்து 6 பேர் பதவி விலகியிருப்பதே அக்கட்சிக்குள் பிரச்சனை இருப்பதை காட்டுகின்றது. இது குறித்து நீங்கள் அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும்.. என பதில் அளித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பதில் அளித்த திருமாவளவன், "இந்த விவகாரத்தில் அமைச்சர் சரத்குமார் தன்னைத் தானே நிரூபிக்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. எல்லாரும் தயாராக இருக்க வேண்டும்.. நம்முடைய கூட்டணி கட்சி ஆதரவோடு தான் தவெகவின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பார்த்து பார்த்து நாம் திட்டங்கள் கொண்டு வந்தோம். நமது தமிழ்நாடு இப்போது சீரழிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.. தவெகவுக்கு வாக்களித்தவர்களும் ஏன் வாக்களித்தோம் என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்" என கூறியிருந்தார்.













Click it and Unblock the Notifications