35 எம்எல்ஏக்கள் காலி.. சபரீசன் டேட்டாவை மிஞ்சிய உளவுத்துறை ரகசியம்! திமுக கோட்டையில் விஜய் மேஜிக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் இரும்புக் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் இந்தத் தேர்தலில் ஆடிப்போய்க் கிடக்கின்றன. "டேட்டா" அரசியல் பேசிய ஒரு தனியார் வியூக நிறுவனத்தின் அறிக்கையை நம்பி, செல்வாக்கு இழந்த சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்ததுதான் இந்த மரண அடிக்குக் காரணம் என அறிவாலயத்தின் உள்வட்டாரங்கள் குமுறுகின்றன. கட்சித் தலைமையின் காதுகளை மறைத்து, சில அமைச்சர்களும் அந்த வியூக நிறுவனமும் நடத்திய ரகசிய டீலிங் இப்போது லேசாக கசிய துவங்கி உள்ளது.

கடந்த தேர்தல்களை போலவே, இந்த முறையும் வேட்பாளர் தேர்வில் ஒரு தனியார் தேர்தல் வியூக அமைப்பின் பங்களிப்பு பிரதானமாக இருந்துள்ளது. முதலமைச்சரின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில் செயல்பட்ட அந்த அமைப்பின் தரவுகளையே கட்சித் தலைமை வேதவாக்காக நம்பியிருந்ததாம்.

Stalin DMK Chennai Sabareesan 35 MLAs TVK Vijay Election Results Data Failure Arivalayam Kolathur 2026 Defeat Strategy Fortress Fall 35 2026

திமுக சென்னை தோல்வி

ஆனால், அந்த அறிக்கைகள் யாவும் கள யதார்த்தத்திற்குத் தொடர்பில்லாமல் இருந்ததாக இப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் குமுறுகிறார்கள். மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களும், ஏற்கனவே பதவியில் இருந்த எம்எல்ஏக்களும் அந்த அமைப்பின் முக்கியப் புள்ளிகளுடன் ஒரு ரகசியக் கூட்டணியை அமைத்துக்கொண்டதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

தங்களுக்கு சாதகமான ஒரு பிம்பத்தைத் தலைமையிடம் கொண்டு சேர்க்க, இந்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சில டீலிங்குகள் பேசப்பட்டதாகவும் அறிவாலயத்தின் உள்வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதன் விளைவாக சுமார் 35-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்களுக்குத் தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் தவெக அலையில் சிக்கி மண்ணை கவ்வி விட்டார்கள்..

டேட்டா நம்பிய சபரீசன்

குறிப்பாக, சென்னையின் முக்கிய முகங்களான பிரபாகர் ராஜா, எழிலன், மயிலை வேலு, எபினேசர் ஆகியோரும், புறநகர் மற்றும் அண்டை மாவட்டங்களில் சுதர்சனம், சுந்தர், காரப்பாக்கம் கணபதி, கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், அர்விந்த் ரமேஷ் மற்றும் வி.ஜி.ராஜேந்திரன் போன்றோரும் வரிசையாகத் தோல்வியை தழுவியுள்ளனர்.

"மக்களிடம் செல்வாக்கு இழந்தவர்களை மாற்ற வேண்டும்" என அடிமட்டத் தொண்டர்கள் கொடுத்த எச்சரிக்கையை விட, அந்த அமைப்பின் "பளபளப்பான" அறிக்கைகளுக்கே மேலிடம் முக்கியத்துவம் கொடுத்ததுதான் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படை எனத் தேர்தல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வேட்பாளர் தேர்வு

இருந்தாலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வியூக அமைப்பு தரப்போ அல்லது கட்சி தலைமையோ அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

"வேட்பாளர் தேர்வு என்பது பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே நடந்தது" என ஒரு தரப்பினர் இந்த விமர்சனங்களை மறுக்கிறார்கள். ஆனாலும், சென்னை மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தொடர் சரிவு, தலைமையின் கணக்குகளில் ஏதோ ஒரு இடத்தில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதை உறுதிப்படுத்துவதாகவே அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

டேட்டா சரியா? தவறா?

அரசியலில் டேட்டாக்களை நம்புவது தவறில்லை, ஆனால் அதுவே தொண்டர்களின் குரலை நசுக்கும் சக்தியாக மாறும்போது வீழ்ச்சி நிச்சயமாகிவிடுகிறது.. திமுக போன்ற ஒரு பேரியக்கம், ஒரு கார்ப்பரேட் அமைப்பின் பரிந்துரைகளை தன் கட்சியின் அடிமட்ட உணர்வுகளுக்கு மேலாக வைத்தது ஒரு மிகப்பெரிய நிர்வாக தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அந்த அமைப்பைத் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக எழும் புகார்கள், கட்சித் தலைமையின் காதுகளை மறைத்த சதி வலை என்றே தோன்றுகிறது.

விஜய்யின் தவெக அலையை வெறும் சினிமா கவர்ச்சி என அலட்சியப்படுத்தியதும், அதிருப்தியில் இருந்த இளைஞர்களின் மனநிலையை அந்தத் தனியார் நிறுவனம் சரியாக கணிக்க தவறியதும் திமுகவுக்கு பெரும் சரிவைத் தந்துவிட்டது போலும்..

கார்ப்பரேட் அறிக்கை

இந்த தோல்விக்கு கார்ப்பரேட் அறிக்கைகள் ஒருபுறம் காரணமாகச் சொல்லப்பட்டாலும், மறுபுறம் தமிழக உளவுத்துறையின் ரகசிய எச்சரிக்கைகளையும் திமுக தலைமை கோட்டை விட்டதாகக் கூறப்படுகிறது.

தவெக விஜய், தனது அரசியல் நகர்வுகளை எந்தவொரு ஆரவாரமும் இன்றி, உளவுத்துறையினரே மோப்பம் பிடிக்க முடியாத அளவுக்கு மிக ரகசியமாகத் திட்டமிட்டார். பொதுவாக ஒரு கட்சியின் பலம் மற்றும் வேட்பாளர்களின் செல்வாக்கு குறித்து அரசு உளவுத்துறை முன்கூட்டியே கணித்துவிடும்.

உளவுத்துறை ரிப்போர்ட்

ஆனால், விஜய் எப்படித் தமிழக உளவுத்துறை மற்றும் ஊடகங்களின் கண்களில் படாமல் சீக்ரெட் டெக்னிக்கை கையாண்டாரோ, அதே பாணியில் சென்னை கோட்டைக்குள் ஒரு சத்தமில்லாத புரட்சி நடந்துள்ளது. மக்களின் உண்மையான மனநிலையைத் துல்லியமாக கணிக்கத் தவறிய உளவுத்துறை மற்றும் சபரீசனின் தரவு குழுக்கள், விஜய்யின் ரகசிய உளவுத்துறை வியூகத்தில் சிக்கித் தவிடுபொடியாகிவிட்டன என்பதே தற்போதைய கசப்பான உண்மை.

இனியாவது கார்ப்பரேட் அறிக்கைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, களத்தில் வியர்வை சிந்தும் தொண்டர்களின் குரலுக்குத் தலைமை செவிசாய்க்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்ப்பு வரும் காலங்களில் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அதைவிட முக்கியமாக, உள்கட்சிக்குள் நடந்ததாகச் சொல்லப்படும் அந்த ரகசிய டீல் குறித்துத் தலைமை விரிவான விசாரணை நடத்துவதே சரிவைத் தடுப்பதற்கான முதல் படியாக இருக்கும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+