தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்வு.. விஜயபாஸ்கர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைதடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1204 ஆக நேற்று மாலை நிலவரப்படி உயர்ந்தது
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசும் உடன் இருந்தார்.

2739 பேருக்கு சோதனை
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், " 17835 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. 2739 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 34 பாசிட்டிவ் ஒற்றை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 4 பேரில் 3 பேர் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் மருத்துவர் ஆவார். இதன்மூலம் 38 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

118 பேர் குணம்
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.. இன்று ஒரே நாளில் 37 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று வரை 81 பேர் குணம் அடைந்தனர். எனவே இன்று வரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

5320 பேரை சோதிக்கலாம்
தமிழகத்தில் 26 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக டெஸ்டிங் லேப் உள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் முறையில் செயல்பட்டால் ஒரு நாளைக்கு 270 பேருக்கு அரசு மருத்துவமனை பரிசோதனை மையங்களில் பரிசோதிக்க முடியும். தனியார் மருத்துவமனை சோதனை மையங்களில் 100 பேரை சோதிக்க முடியும். எனவே 5320 பேரை ஒரு நாளைக்கு நம்மால் (தமிழகத்தில்) சோதிக்க முடியும். ஆனால் அதைவிட குறைவாக நாம் சோதித்து வருகிறோம்.

14 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு என்பது 1.1 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைத்துள்ளோம். தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாஸ்க்கும் உள்ளது
கொரோனாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே வல்லுனர்களை கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 146 கோடிக்கு ஆர்டர் கொடுத்து மருந்துகளை வாங்கினோம். அதன்பிறகு 204 கோடிக்கு மொத்தமாக மருந்துகளை வாங்கினோம். 3பிளேயர் மாஸ்க், என்95 மாஸ்க், மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் நம்மிடம் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு உள்ளது. 2லட்சம் 3பிளேயர் மாஸ்க் சப்ளை உள்ளது. 20 ஆயிரம் என்95 மாஸ்க் கொடுத்துவருகிறோம். தேவையான நிதி உதவிகளை அரசு கொடுத்துள்ளது. தற்போது ஒன்றரை லட்சம் நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு தமிழக அரசின் கைவசம் மருந்து உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications