ஈரக்குலையே நடுங்கிடுச்சு.. யாரிந்த பிஞ்சுகள்.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா? பதறிக்கேட்ட இணையம்
சென்னை: "எங்கள் மீது சிறுநீர் கழித்தார்கள்.. . அவர்கள் எச்சில் துப்பிய காலணிகளை, நக்கும்படி எங்களிடம் சொன்னார்கள்" என்று தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, தாக்கப்பட்ட இளைஞர், போலீசில் பரபரப்பு புகார் தந்துள்ளார்.. என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஸ்ரீராம்பூர் தாலுகாவில் உள்ளது ஹரேகான் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஆடு ஒன்றும், சில புறாக்களும் திருடு போனதாக தெரிகிறது.

ஆடு, புறாக்கள்: இந்த ஆட்டையும், புறாக்களையும் திருடியதாக 6 பேர் கொண்ட கும்பல் மீது சந்தேகம் வலுவாக விழுந்தது.. இதில், 20 வயதுடைய 4 பட்டியல் சமூக இளைஞர்களும் அடக்கம்.
இவர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு, கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.. இப்படி ஒரு கொடூரத்தை செய்த சம்பவம் பொதுமக்களை நிலைகுலைய செய்துள்ளது.
4 இளைஞர்கள்: இந்த சம்பவம் குறித்து, போலீஸ் தரப்பில் சொல்லும்போது, ஸ்ரீராம்பூர் கிராமத்தில் ஆடு, புறாக்கள் திருடு போனதாக 20 வயதுடைய பட்டியல் சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்தி சென்றிருக்கிறது.. இதற்கு பிறகு, அவர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கியதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியவர்களே, அதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள்.. யுவராஜ் கலண்டே, மனோஜ் போடகே, பப்பு பார்கே, தீபக் கெய்க்வாட், துர்கேஷ் வைத்யா, ராஜு போரேஜ் போன்றோர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.. ஆடு, புறாக்களை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றனர்.
விசாரணை : இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அகமதுநகர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.. மேலும் 5 பேர் தலைமறைவாக இருக்கிறார்களாம். அவர்களையும் தேடிக்கொண்டிருப்பதாகவும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் என்றும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், காயமடைந்த சுபம் மகடே போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார்.
அந்த புகாரின், "என் கால்களில் கயிறை வைத்து கட்டி தலைகீழாக தொங்க விட்டார்கள்.. என்னுடன் 3 சிறுவர்களும் இருந்தனர்.. அவர்களையும் கடுமையாக தாக்கினார்கள்.. எங்களை தாக்கியவர்கள் அனைவருமே, எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்கள்தான்..
ஆனால், நாங்கள் மஹர் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்.. அதனால்தான், அவர்கள் கோபமடைந்து, எங்கள் மீது சிறுநீர் கழித்தார்கள்.. அவர்கள் எச்சில் துப்பிய காலணிகளை, நக்கும்படி எங்களிடம் சொன்னார்கள்" என்று பாதிக்கப்பட்ட ஷுபம் மகதே புகாரில் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்கள்: இந்த பேரின்பேரில், 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 307 (கொலை செய்ய முயற்சி), 364 (கடத்தல்), மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதுநகரை சேர்ந்த மாநில வருவாய்துறை அமைச்சர் ராமகிருஷ்ண விகே பாட்டீல் மருத்துவமனைக்கு சென்று சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சந்தித்தார். தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்..

துஷ்பிரயோகம்: வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ்அம்பேத்கர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, "இந்த ஜாதி பாகுபாடு, தாழ்த்துதல், துஷ்பிரயோகம், அவமானம், வன்முறை மற்றும் மிருகத்தனம் புதியது கிடையாது.. இதனை சவாலாக ஏற்று மாற்றுவோம்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ்தபே இதை பற்றி சொல்லும்போது, தலித் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு தவறி விட்டது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொந்தளிப்பு: நேற்று இப்படி ஒரு சம்பவம் நடந்ததுமே, கொதித்து பான மக்கள், எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.. இதனால், ஹரேகான் கிராமத்தில் கடையடைப்பு நடத்தப்பட்டது.. இன்றும் அங்கும் பதற்றம் நீடித்து வருகிறது.. பட்டியல் மக்கள் மீதான அவலங்கள் எப்போது நீங்கும்? என்று சோஷியல் மீடியாவில் கேள்விகள் வலுத்து வருகின்றன.. ஆடு, புறாக்களை திருடியதாக பட்டியல் சமூக இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications