மயிலாப்பூரில் நடக்கும் பெரிய மாற்றம்.. 115 அடி ஆழத்தில் 4 அடுக்குகளாக மெட்ரோ நிலையம்.. வாவ்.. செம!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் 4 அடுக்குகள் கொண்டதாக மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. தரையில் இருந்து 115 அடி ஆழம் வரை அமையும் இந்த ரயில் நிலையம் பயணிகளுக்கு பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பணி நிமித்தமாகவும் கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு தேவைகளுக்காக சென்னையை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மெட்ரோ ரயில்களும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னை சென் ட்ரல் - எக்மோர்- கோயம்பேடு-விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.61, 841 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.
மாதவரம் டூ சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் டூ பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் டூ சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும் என மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக சென்னையின் பல்வேறு சாலைகளிலும் ராட்சத இயந்திரங்களை கொண்டு வந்து நிறுத்தி பணிகள் நடக்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதையாகவும் மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகளாகவும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. சென்னை மெரினாவில் கூட அண்மையில் சுரங்க அமைக்கும் பணி தொடங்கியது. இப்படி பல்வேறு இடங்களிலும் முழு வீச்சில் ரயில் நிலைய கட்டமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாட்டிலேயே முதல் முறையாக மயிலாப்பூரில் தரையில் இருந்து 115 அடி ஆழத்தில் 4 அடுக்காக மெட்ரோ ரயில் நிலையம் அமைய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 நடைமேடைகளுடன் இந்த ரயில் நிலையம் கட்டப்பட இருப்பதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக்வும் மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:- மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 3 வது மற்றும் 4 வது வழித்தடத்திற்கான பரிமாற்றம் நிலையமாக இருக்கும்.
பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடை மேடை, கீழ்நடை மேடை என மொத்தம் நான்கு நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில்(35 மீட்டர்) நடைமேடை அமைய இருக்கிறது. இந்த பணி பெரிய சவாலாக இருக்கும். மயிலாப்பூரை பொருத்தவரை நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. போதிய நிலமோ, சாலை அகலமாகவோ இல்லை.
இதனால் ஆழமான ரயில் நிலையமாக கட்ட வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் திறக்கப்படும் போது இது பொறியியல் அற்புதமாக இருப்பதோடு பயணிகளை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும். மயிலாப்பூர் ரயில் நிலையம் முக்கிய நிலையமாக இருக்கும். அதாவது தற்போதுள்ள ஆலந்தூர், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications