4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் வழக்கில் சிக்கி, குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையிலும் பல தடைகளை மீறிச் சாமர்த்தியமாக முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

"இந்தத் தேர்தல்தான் எனக்குக் கடைசி தேர்தல். வயது காரணமாக இனிமேல் போட்டியிட முடியுமா எனத் தெரியவில்லை. தேர்தலில் நீங்கள் இடும் கட்டளையை ஏற்று உங்களுக்காக பணிபுரியச் சித்தமாக இருக்கிறேன்" என்றார் மு.கருணாநிதி. அச்சமயம் அவருக்கு 77 வயதாகி இருந்தது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 'டைடல் பார்க்' திட்டம், கிராமங்களுக்கு மினி பஸ் விட்டது, 'வரும்முன் காப்போம்' காப்பீடுத் திட்டம், குமரி முனையில் வள்ளுவருக்குச் சிலை அமைத்தது என தன் ஆட்சிக்கால சாதனையைத் திருச்சி கொட்டப்பட்டு மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சார மாநாட்டில் பட்டியல் இட்டார்.

4 Nominations Rejected Jayalalitha Became Chief Minister

ஆனால், திமுக ஆட்சியில் 2000 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. சட்ட ஒழுங்கு குறித்து ஐயம் எழுந்தது. உளவுத்துறை ஒழுங்காகச் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. அரசு தூதுக்குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது. 108 நாட்கள் வீரப்பன் பிடியில் ராஜ்குமார் சிக்கிக் கிடந்தார். திமுக ஆட்சியில் காவல்துறை உறங்குகிறதா? எனப் பேச்சுகள் ஒலிக்கத் தொடங்கின.

கருணாநிதி சதி செய்தாரா?

இந்நிலையில்தான் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2001 மே மாதம் 10 என அறிவிக்கப்பட்டது. அதுவரை டான்சி நில வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட முடியுமா? எனப் பத்திரிகைகள் அலசி ஆராய்ந்து வந்தன.

திமுக ஆளும் கட்சியாக இருந்தும் கூட்டணி அமைப்பதில் போதாமைகள் நிலவின. புதியதாகத் தொடங்கப்பட்ட ஜாதிக் கட்சிகளுக்கு அவர் சீட்டுக் கொடுத்தார். கு.ப. கிருஷ்ணன், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாதிய அடையாளம் பெற்றிருந்த காலம். கூட்டணி மேடையில் பேசிய திருமாவளவன், "பாட்டாளி மக்கள் கட்சி என்பது பாசமுள்ள மகன் கட்சி ஆகிவிட்டது" என விளக்கவுரை எழுதினார்.
"சாதிக் கட்சிகள் உருவாகிவிட்ட நிலையில் அவற்றை நாங்கள் அரவணைத்து ஆதரித்துக் கொள்கிறோம். அந்தக் கட்சிகளை ஆதரிப்பது ஜாதிகளை ஆதரித்ததாக அர்த்தம் இல்லை" என்று மு.கருணாநிதி விளக்கினார்.

ஊழல் வழக்கில் குற்றவாளி என ஜெயலலிதாவை நீதிமன்றம் கூறியிருந்ததால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருந்தது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் அவர் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அது ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என அவருக்கே சந்தேகம் உண்டானது. 'ஒருவர் இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்வதே அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது' என ஒரு வாரப் பத்திரிகை தலையங்கம் தீட்டியது.

அதற்குள் அடுத்த அதிர்ச்சியைத் தந்தார் ஜெ. புவனகிரியிலும் புதுக்கோட்டையிலும் கூடுதலாக இரண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார். இதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என விவாதம் மறைந்து, அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? படாதா? என்ற புள்ளியை நோக்கிச் சாமர்த்தியமாக விவாதத்தை ஜெ நகர்த்தினார்.

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுத் தாக்கல் செய்யமுடியாது என்பதே தேர்தல் விதி. அறிந்தும் 4 தொகுதிகளைத் தாக்கல் செய்தார். இறுதியில் 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. உடனே, சிவகங்கையில் பேசிய ஜெயலலிதா "இது கருணாநிதியின் சூழ்ச்சி" என்று ஒரு புது கதை கட்டினார். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் ஒருநாள் வெல்லும்" என்றும் கர்ஜித்தார்.
மாவட்ட நிர்வாக தேர்தல் அதிகாரிகள் 4 மனுவை அளித்தது விதிமீறல் என்று காரணம் கூறினர். தேர்தல் ஆணையமோ, "ஊழல் வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை" என அதிகாரி வழியாக அறிக்கை வெளியிட்டது.

ஜெயலலிதா மனு நிராகரிக்கப்பட்டதால், அதிமுக வெற்றிபெற்றால் யார் முதல்வர்? எனக் கேட்கத் தொடங்கியது திமுக. உடனே, "234 தொகுதிகளிலும் நான் தான் போட்டியிருக்கிறேன். வென்றால் நானே முதல்வர்" என்று ஆவேச உரையாற்றினார் ஜெயலலிதா. அதை மக்களும் நம்பினர் என்பது தேர்தல் வெற்றிக்குப் பின் புரிந்தது. 96 தேர்தலில் ஊழல் குற்றத்திற்காகப் பொங்கி எழுந்து ஜெவை தண்டித்த வாக்காளர்கள், 2001இல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதிசெய்த பின்பு மன்னித்து ஏற்க தாயாராகி இருந்தனர்.

'அடிப்பட்ட வேங்கை' ஆக ஜெ

அதிமுகவுடன் அணி சேர்ந்திருந்த மூப்பனார், "வேட்பு மனு நிராகரிப்பு ஒரு துரதிருஷ்டம்" என்றார். அதிமுக கூட்டணியை எதிர்த்து தா.மா.க ஜனநாயகப் பேரவையைத் தொடங்கிய சிதம்பரம் திமுக அணியில் இருந்தார். அவருக்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒன்றை அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். திருநாவுக்கரசுக்கு 3 சீட் கொடுத்தது திமுக. அவர் 4 சீட் கேட்டார். 'மூன்று கொடுத்தால் ஒன்றைத் திரும்பித் தரும் சிதம்பரமும் 3 தந்தால் போதாது 4 கொடு என்கிற திருநாவுக்கரசும் நம் கூட்டணியிலேதான் இருக்கிறார்கள்" என்று நகைச்சுவையாகச் சுட்டிக் காட்டினார்.
ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா 'அடிப்பட்ட வேங்கையாக' வலம் வந்தார். இந்தத் தேர்தல் அவருக்கு வாழ்வா? சாவா? என்ற நிலைக்குள் அவரைத் தள்ளி இருந்தது. அவர் எந்தச் சூழ்ச்சியையும் மேற்கொள்ளக் காத்திருந்தார். 'ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடித்து மக்களை மூளைச்சலவை செய்வதில் வல்லவர்' என்று 'கல்கி' தலையங்கம் தீட்டியது.

இறுதியில் ஜெயலலிதாவின் கை ஓங்கியது. அதிமுக 132 தொகுதிகளில் வென்றது. தேர்தலில் போட்டியிடாமலே அவர் முதல்வராக முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் ஆண்டிபட்டியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனைப் பதவி விலகவைத்து 2001இல் நடந்த இடைத் தேர்தலில் 78437 வாக்குகளை வாங்கி வென்றார். முன்னதாக தங்க தமிழ்ச்செல்வன் பெற்ற வாக்குகள் 60817. கூடுதலாக 17 ஆயிரம் வாக்குகள் ஜெவுக்கு கிடைத்தன.

திமுகவுக்கு இத்தேர்தலில் நெத்தியடி வாங்கியது. 31 இடங்கள் கிடைத்தன. மூப்பனாரின் தாமாக 23 இடங்களைத் தட்டிச் சென்றது. பாமக 20 தொகுதிகளில் வென்றது. பாஜகவுக்கு 4 சீட்டுகள் கிடைத்தன. சிபிஐ 5, சிபிஎம் 6, இந்தியத் தேசிய காங்கிரஸ் 7, பாவர்ட் பிளாக் 1 என அளவில் வெற்றியை உறுதிசெய்தன.

ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா உப்பிலியாபுரம் சரோஜாவுக்கு முதல் 5 அமைச்சரவையில் இடமளித்தார். இவர் மலைவாழ் வகுப்பைச் சேர்ந்தவர். அதுவரை எந்த மலைவாழ் மக்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்ததே இல்லை. முதல் அமைச்சராக சரோஜா பதவியேற்றது பெரிய பேசு பொருளானது.

அதிமுக ஆட்சியில் சைதாப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, அச்சரப்பாக்கம், காஞ்சிபுரம், வாணியம்பாடி, சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்தன. அனைத்திலும் அதிமுக வென்றது. மங்களூரில் மட்டும் திமுக வென்றது.

எழுதியவர்: கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+