5 மெகா சிக்கல்கள்.. 3 கேள்விகள் .. எடப்பாடிக்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை.. என்ன நடக்குமோ?
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தான்தான் என்று அறிவித்து இருக்கும் எடப்பாடி பழனிசாமி பல சிக்கலைகளை எதிர்கொண்டு உள்ளார். இந்த சிக்கல்களை அவர் எப்படி சமாளிக்க போகிறார்.. அவரின் அடுத்த கட்ட அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவின் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழுவில் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் 4 மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லி அழுத்தம், சசிகலா - ஓபிஎஸ் பிரஷர், உயர் நீதிமன்ற வழக்கு என்று பல அழுத்தங்களை எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்டு வருகிறார்.
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்றால் எடப்பாடி பழனிசாமி அண்ட் டீமிற்கு எல்லாம் பக்கமும் அடி என்று சொல்லும் அளவிற்கு பல பக்கங்களிலும் அவரின் தரப்பு சிக்கலைகளை எதிர்கொண்டு உள்ளது. அது என்ன சிக்கல்கள் என்று பார்க்கலாம்!

சிக்கல் 1 - ஓபிஎஸ்
எடப்பாடிக்கு முதல் சிக்கல் என்றால் அது ஓ பன்னீர்செல்வம்தான். அவர் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு தேர்தல் ஆணைய கூட்டத்திலும் தனது தரப்பு நிர்வாகியாக கோவை செல்வராஜை அனுப்ப திட்டமிட்டுள்ளார். இது போக டெல்லி சென்று தலைவர்களை சந்திப்பது, சென்னை வந்த மோடியை சந்தித்தது என்று ஓபிஎஸ் அடுத்தடுத்து அரசியல் ரீதியாக எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதை எடப்பாடி எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிக்கல் 2 - டெல்லி
அதேபோல் டெல்லி தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு ஏகப்பட்ட பிரஷர் உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போது அவரை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.இது போக எடப்பாடி பழனிசாமியை சென்னை வந்த போதும் மோடி சந்திக்கவில்லை. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு பாஜக இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. டெல்லி பாஜக சார்பாக இதுவரை யாருமே எடப்பாடியை வாழ்த்தவில்லை. இதனால் எடப்பாடிக்கு டெல்லி சப்போர்ட் செய்யாமல் ஓபிஎஸ் பக்கம் உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது எடப்பாடி தரப்பிற்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

சிக்கல் 3 - வழக்குகள்
இது இப்படி இருக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் அடுத்தடுத்து வருமானவரித்துறை ரெய்டும் நடந்து வருகிறது. சமீபத்தில் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல் எஸ்.,பி வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல் சி விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கில் வழக்கு பதிவு செய்யவும் சிபிஐ அனுமதி கேட்டது. எடப்பாடி டீம் ஆட்கள் இப்படி டெல்லியால் குறி வைக்கப்பட்டு இருப்பதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

சிக்கல் 4 - ஸ்டாலின்
டெல்லி ஒரு பக்கம் எடப்பாடி டீமை குறி வைத்துள்ள நிலையில் இங்கே முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். ஒரு பக்கம் கோடநாடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற இடைக்கால தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வரும் தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்து உள்ளார். இதில் தமிழ்நாடு அரசும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.

சிக்கல் 5 -தேர்தல் ஆணையம் நீதிமன்றம்
இது போக அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இந்த பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் உச்ச நீதிமன்றமும் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளது. இந்த வழக்குகளில் என்ன தீர்ப்பு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனாலும்.. அவரால் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்க முடியாத அளவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேள்வி 1 - காங்கிரஸ்
இன்னொரு பக்கம் எடப்பாடி காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதா என்ற குழப்பமும் ஏற்பட்டு இருக்கிறது. அவர் காங்கிரஸ் பக்கம் சாய போவதாக கடந்த சில நாட்களாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் திமுக தலைமையிலான தமிழ்நாடு கூட்டணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் பக்கம் செல்வதா.. பாஜக பக்கத்திலேயே இருப்பதா.. தனித்து களம் காண்பதா என்ற குழப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி 2 - நியமனங்கள்
அதேபோல் உச்ச நீதிமன்றம் கடந்த உத்தரவில், உயர் நீதிமன்ற விசாரணை முடியும் வரை அதிமுகவில் இதே நிலை நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் புதிய நியமனங்களை செய்ய முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் இதில் எடுக்கும் முடிவுகள் வழக்கு விசாரணை முடியும் வரை அமலுக்கு வராது. இதனால் எடப்பாடி என்ன செய்வார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும் நடத்த முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

கேள்வி 3 - சமாதானம்
இது போக எடப்பாடி டெல்லி தரப்புடனும், ஓ பன்னீர்செல்வம் தரப்புடனும் சமாதானமாக செல்வாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வமுடன் சமாதானமாக செல்ல மாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே கோர்டில் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ரெய்டுகளை சமாளிக்க டெல்லி தரப்புடன் எடப்பாடி சமாதானமாக சென்று நட்பாக மாறுவாரா? அல்லது மோதல் போக்கை கடைபிடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications