விமானப்படை நிகழ்ச்சி.. 5 உயிர்கள் போச்சு! ஸ்டாலின் பதில் சொல்லியே ஆகணும்.. லண்டனில் கொதித்த அண்ணாமலை
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமானப்படை கண்காட்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு தமிழக அரசு போதிய ஏற்பாடுகள் செய்யாததே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்னாமலை குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றுள்ள அண்னாமலை தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளர். அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு.
தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட இன்று லட்சகணக்கான மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு திரண்டனர். கிட்டதட்ட 15 லட்சம் பேர் விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்தனர். வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்சத்து குறைந்து 200-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications