மீண்டும் சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை.. 5 பேரை கஸ்டடியில் எடுத்த போலீசார்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறையிலுள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து 5 பேரும் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து துப்பு துலக்கி வந்தனர்.

முதல் கட்டமாக கடந்த கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் உட்பட தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருந்த திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர், கொலைக்கான காரணம் என்ன என்பது மட்டும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். முன்னதாக, குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் அனுமதி கோரினர். சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவர்கள் 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் அனுமதி வழங்கினார். இதையடுத்து, பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரும் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பொன்னை பாலு, அருள் உள்ளிட்டோர் 2 முறை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் அவர்கள் 7 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட இருப்பதால் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அயனாவரத்தில் ஒன்றரை வயது மகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கடிதம் வாயிலாக மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி விடுவேன் என்றும் குடும்பத்தினர் அனைவரையும் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என்றும் சதீஷ் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications