முனுசாமி பாமகவுக்கு போகணும்.. ஈபிஎஸ் பணம் கரையணும்.. ஓபிஎஸ் டீமின் 5 பிரார்த்தனை.. மருது போட்ட போடு!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்காக ஐந்து பிரார்த்தனைகள் செய்ய இருப்பதாக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர்களான புகழேந்தி மற்றும் மருது அழகுராஜ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், சி.வி.சண்முகம், திமுக + பாஜக கூட்டணி அமையப்போகிறது எனக் கூறி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசியது பற்றிப் பேசினர்.
மேலும், ஓபிஎஸ் தரப்பு இன்று கிறிஸ்துமஸ் விழாவை நடத்த இருக்கும் நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்காக 5 பிரார்த்தனைகளை மேற்கொள்ள இருப்பதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கிறிஸ்துமஸ்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், கிறிஸ்துமஸ் பெருவிழாக்களை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்த உள்ளார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஆலோசனை கூட்டம்
தற்போது சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையேற்றுப் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவது பற்றி முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மருது அழகுராஜ்
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜ், "கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும் என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக நாங்கள் பிரார்த்தனை செய்வோம். அவர் பேசுவதை நிறுத்திவிட்டாலே கட்சிக்கு நல்லது நடந்துவிடும். பாஜகவால் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. எடப்பாடி பழனிசாமியால் தான் அதிமுகவிற்கு பின்னடைவு. பழனிசாமி தன்னை திருத்திக்கொண்டு கடிதம் கொடுத்தால் அவர் அதிமுகவில் இணைக்கப்படலாம். அதுபற்றி ஓபிஎஸ் முடிவு எடுப்பார்.

5 பிரார்த்தனைகள்
கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அதிமுக சார்பில் ஐந்து பிரார்த்தனைகள் செய்ய இருக்கிறோம். 1. கே.பி.முனுசாமி பாமகவுக்குச் சென்றுவிட வேண்டும். 2. உதயகுமார் உண்மையைப் பேச வேண்டும். 3. ஜெயக்குமார் ஊமையாகிவிட வேண்டும். 4. சி.வி.சண்முகம் நிதானத்திற்கு வரவேண்டும். 5. எடப்பாடி பழனிசாமியின் பணம் வேகமாகக் கரைய வேண்டும் ஆகிய 5 பிரார்த்தனைகளைச் செய்ய இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை நழுவுறாரே
மேலும் பேசிய புகழேந்தி, "அண்ணாமலையின் கனிவு உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரே மத்தியில் ஆளக்கூடிய கட்சியைச் சேர்ந்தவர்களை அவன் இவன் எனப் பேசுகிறார். அதற்கு உரிய பதில் சொல்லாமல் பாஜகவும், அண்ணாமலையும் நழுவுவது ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணாமலையிடம் இருந்து சரியான பதிலடியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்டால்
புகழேந்தி பேசுகையில், "துரோகிகளோடும் ஊமைகளோடும் பாஜக கூட்டணி வைத்துக் கொள்ளாது. அதன் வெளிப்பாடுதான் சி.வி.சண்முகம் பேசுவது. சி.வி.சண்முகம் இவ்வளவு மோசமாகப் பேசிய பிறகு அண்ணாமலை நியாயமாக நடந்து கொண்டு நல்ல முடிவை எட்டவேண்டும். யார் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்வோம். சி.வி.சண்முகம் நிதானத்துடன் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஜெயக்குமாருக்கு இங்கு இடமில்லை. அவரை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டடோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications