தூத்துக்குடி ரயிலில் 'போதை போலீசார்' ரகளை! ஒரே ஒரு ட்வீட்! உடனே ஆக்ஷன்.. கைது செய்த ரயில்வே போலீஸ்
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற முத்து நகர் அதிவேக விரைவு ரயிலில் தமிழ்நாடு போலீசார் சிலர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை முத்து நகர் அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி மார்க்கமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட முத்து நகர் அதிவேக விரைவு ரயிலில் எஸ்3 கம்பார்ட்மெண்டில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் சிலர் மது அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை
எஸ் 3 கம்பார்ட்மெண்டில் கழிப்பறைக்கு அருகில் அமர்ந்து 8 போலீசார் மது அருந்தியபடி வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் ஆவர். சரியாக கழிப்பறை அருகே இவர்கள் மது அருந்தியதால் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் அங்கிருந்த பெண்கள் கஷ்டப்பட்டு உள்ளனர். அந்த கம்பார்ட்மெண்டில் குடும்பத்தோடு பலர் வந்திருந்த நிலையில், போலீசாரின் இந்த செயலால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

என்ன நடந்தது?
ரயிலில் பயணித்த பயணிகளின் புகாரை அடுத்து, மது அருந்தியபடி பயணித்த 5 காவல் அதிகாரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒன்இந்தியா தமிழிடம் பேசுகையில், 8 போலீசார் பாத் ரூம் அருகே அமர்ந்து மது குடித்தனர். அதோடு அங்கேயே வாழைபழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை கழிப்பறை உள்ளே வீசினர். இதனால் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர்.

போலீசார் ரகளை
குடும்பங்கள் இருக்கிறார்கள்.. தண்ணீ அடிக்க வேண்டாமே என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. ஒரு குடும்பம் அவர்களிடம் போய் கேட்டதற்கு அந்த போலீசார் வாக்குவாதம் செய்தனர். 8 போலீசார் ஒன்றாக வந்ததால் யாருக்கும் பயப்படாமல் மக்களிடம் கோபமாக நடந்து கொண்டனர். அந்த குடும்பம் சார்பாக ரயில்வே உதவி எண்ணுக்கு கால் செய்தால் எந்த பயனும் இல்லை. அதன்பின் ரயில் சேவா ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்தோம். அவர்கள் இந்த தகவலை தென்னக ரயில்வேவிற்கு அனுப்பினார்கள்.

ரயில்வே போலீஸ்
அவர்கள் உடனே இந்த தகவலை தமிழ்நாடு ரயில்வே போலீசுக்கு அனுப்பினார்கள். விருத்தாசலம் ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் எஸ் 3 கம்பார்ட்மெண்டுக்குள் வந்து விசாரித்தனர். போதையில் இருந்த தமிழ்நாடு போலீசாரை கைது செய்ய வேண்டும் என்றால் டிடி முறையாக புகார் அளிக்க வேண்டும் என்று ரயில்வே போலீசார் கூறினார்கள். ஆனால் 8 போலீசார் என்பதால்.. டிடியும் எந்த புகாரும் அளிக்க முன்வரவில்லை.

விருத்தாச்சலம்
பின்னர் ரயில் விருத்தாச்சலம் ஸ்டேஷனில் நின்றது. அப்போது இன்னும் அதிக போலீசார் அங்கு நின்று கொண்டு இருந்தனர். ரயில்வே போலீசார் வருவது தெரிந்து போதையில் இருந்த 1 காவல் அதிகாரி எங்கேயோ ஓடிவிட்டார். சிலர் வேறு வேறு இருக்கைகளில் சென்று ஒன்றும் செய்யாதது போல படுத்துக்கொண்டனர். இவர்களை கண்டுபிடித்து ரயில்வே போலீசார்.. ரயிலில் இருந்து இறக்கிவிட முயன்றனர். ஆனால் ரயிலில் இருந்து இறங்க மறுத்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இறக்கிவிடப்பட்ட போலீஸ்
அங்கே வந்த ரயில்வே போலீஸாரிடமும், புகார் கொடுத்த குடும்பத்திடமும் அந்த தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் கோபமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். ரயிலில் இருந்து இறங்க மறுத்து ரகளை செய்தனர். ஆனால் ரயிலில் இருந்த மற்ற பயணிகள் ஒன்றாக சேர்ந்து போதையில் இருந்து போலீசாரை இறங்க சொல்லி கோரிக்கைவிடுத்தனர். மக்கள் எல்லோரும் ஒன்று கூடியதால் போதை இருந்த போலீசார் வேறு வழியின்றி இறங்க சம்மதித்தனர்.

பாதுகாப்பற்ற நிலை
கடைசியில் ஒரு வழியாக ரயில்வே போலீசார் அங்கு குடித்துவிட்டு ரகளை செய்த 5 போலீசாரையும் ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர், என்று அந்த ரயிலில் பயணித்த பயணி குறிப்பிட்டுள்ளார். இவர்கள் 5 பேர் மீது விருத்தாச்சலம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மக்களை காக்க வேண்டிய தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் சிலரே இப்படி ரயிலில் குடித்துவிட்டு தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications