குளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கரும்புகுப்பம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கரும்புகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் துணி துவைக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நர்மதா என்ற 12 வயது சிறுமி குளத்தில் ஆழத்தில் எதிர்பாராத விதமாகச் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்றவர்களும் ஒருவர் பின் ஒருவராகக் குளத்தின் மூழ்கி உயிரிழந்தனர். மொத்தம் 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (14-7-2021) காலை 10-45 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, நர்மதா (வயது 11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காக சுமதி (வயது 35), ஜோதி (வயது 35), அஸ்விதா (வயது 14), ஜீவிதா (வயது 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications