காணாமல் போன 500 ஏக்கர் நிலங்கள்? மாயமான கோயில் சொத்துக்கள் ஆவணங்களை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதுமே ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியிருக்கிறது.. இந்நிலையில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக்கையை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 44121 கோயில்கள் உள்ளன. இவைகளில் 8450 கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கும் நிலையில், பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் கிடக்கின்றன..

அதனால்தான், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, 2021ம் ஆண்டு மாநிலம் முழுவதிலுமுள்ள கோயில் நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
அப்போது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், அந்த நிலங்களுக்கு உரிய வாடகையை நிர்ணயிக்க வேண்டும், கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோயில் நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், கோயில்களிலுள்ள சிலைகள், நகைகள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை ஹைகோர்ட் பிறப்பித்தது ஞாபகமிருக்கலாம்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.. அதுமட்டுமல்ல கோவில் மீது ஆர்வமுள்ள யாராக இருந்தாலும், கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க கோர்ட்டை அணுகலாம், தெய்வத்தின் நலனைப் பாதுகாக்க நீதிமன்றங்களும் கடமைப்பட்டுள்ளன என்று சமீபத்தில் ஹைகோர்ட் கூறியிருந்தது.
மாயமான கோயில் சொத்துக்கள்
இந்நிலையில், கோவில் நிலங்கள் தொடர்பான மற்றொரு வழக்கில், மாயமான கோயில் சொத்துகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு என்ன காரணம்?
திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டத்திலுள்ள வஞ்சுளீஸ்வரர் கோயில், அக்னீஸ்வரர் கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்பட 64 கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் பெரும்பாலானவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில சொத்துக்கள் தனி நபர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
500 ஏக்கர் நிலம்
கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்டு கோயில்களின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என்று தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவானது தற்போது நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, "கோயில் நிலங்கள் குறித்து வருவாய்த்துறையும், அறநிலையத்துறையும் இணைந்து 2015ல் தயாரித்த அறிக்கை இப்போது காணாமல் போயுள்ளது. தற்போது கோயில்களுக்கு சொந்தமான ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், இந்த கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.
வருமானம் - ஆக்கிரமிப்புகள்
இதையடுத்து நீதிபதிகள், "கரூர் மாவட்டத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன? அந்த கோயில்களின் சொத்து விவரங்கள் எவ்வளவு? அதில் எவ்வளவு சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது? கடைகள் எத்தனை உள்ளன? அவைகளிலிருந்து வருமானம் எவ்வளவு வருகிறது? ஆக்கிரமிப்புகளை மீட்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், அறநிலையத் துறை ஆணையர் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 20 கோயில்களின் நிலையையாவது, அறிக்கையாக அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். 2015ல் செய்யப்பட்டு மாயமான கோயில் சொத்துகள் தொடர்பான கோப்புகளையும் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015ல் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது, பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications