திணறிய கிளாம்பாக்கம்.. திடீர் சாலை மறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லை என்று குற்றம்சாட்டி சுமார் 500க்கும் அதிகமானவர்கள் இரவில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடுக்கு பதிலாக இந்த பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மாவட்டங்களில் இருந்து பஸ்களில் சென்னை செல்வோர் மற்றும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பஸ்களில் பயணிப்போர் கிளாம்பாக்கம் வழியாக தான் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இருப்பினும் கிளாம்பாக்கம் பஸ் முனையம் என்பது அடிக்கடி செய்திகளில் வருகிறது. சரியான நேரத்துக்கு பஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்து வருகின்றனர். மேலும் போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று இரவு வழக்கம்போல் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் போதிய அளவுக்கு பஸ்கள் இல்லை. தென்மாவட்டங்களுக்கு செல்ல அதிக பயணிகள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கு தேவையான பஸ்கள் அங்கு இல்லை. இதனால் பயணிகள் நீண்டநேரமாக காத்திருக்க வேண்டி இருந்தது.
மேலும் அவ்வப்போது வந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் ஒரு கட்டத்தில் கோபமான பயணிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500க்கும் அதிகமானவர்கள் மறியல் போராட்டத்தை நடத்தினர். பஸ் முனையத்தின் வெளியே உள்ள நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்காக இரும்பு தடுப்பு வேலிகளை வைத்து பயணிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிற பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக கூறினர். இதையடுத்து போராட்டம் என்பது கைவிடப்பட்டது. இந்த சம்பவம் கிளாம்பாக்கத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications