தமிழ்நாட்டில் அடங்காத கொரோனா.. தொற்று பாதிப்பால் பெண் உள்பட 2 பேர் இன்று உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ராணிப்பேட்டையில் பெண் ஒருவரும் சென்னையில் 86-வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 38,061-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை இன்று கடிதம் எழுதியிருந்தது.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டு இருந்தார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 500-க்கும் மேல் பதிவாகி வரும் நிலையில், இன்று பாதிப்பு 528 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பில் 258 ஆண்கள் மற்றும் 270 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 37 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 492 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,660 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று ராணிப்பேட்டையில் 48-வயது பெண் ஒருவரும் சென்னையில் 86-வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த இருவரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 38,061-ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications