8,00,000 கோடி கடன்.. 6 சிலிண்டர் இலவசம்! தவெகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற வாய்ப்புள்ளதா?
சென்னை: 6 கேஸ் சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் "அன்னபூரணி சூப்பர் 6" திட்ட அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. மாநிலத்தின் தற்போதைய நிதிச் சூழலில் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சர்வதேச சூழல் மற்றும் தற்போதைய விலை நிலவரத்தை நோக்கினால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

6 கேஸ் சிலிண்டர் திட்டம் சாத்தியமா
இதன் நேரடி தாக்கம் வணிக சிலிண்டர் விலையில் எதிரொலிக்கிறது. மே 1 நிலவரப்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 993 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டு, தற்போது 3,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வணிக ரீதியிலான இந்த விலை உயர்வு மறைமுகமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில்தான் விஜய்யின் இலவச சிலிண்டர் வாக்குறுதி கவனிக்கத்தக்க ஒன்றாக மாறுகிறது.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் மலைக்க வைக்கின்றன. இப்போதைய மதிப்பீட்டின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த வருடத்துக்குச் சுமார் 12,408 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
மொத்த கடன் சுமை 11,00,000 கோடி ரூபாய்?
இன்னொருபுறம் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சவாலான கட்டத்தில் உள்ளது. வரும் 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை சுமார் 11,00,000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகையை சிலிண்டர் மானியத்திற்காகத் திரட்டுவது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இப்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டால், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியாமல் தள்ளிப்போட வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
அரசியல் மற்றும் நிதி ரீதியான தடைகள் ஒருபுறம் இருந்தாலும், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நேர்மறையாகவே பார்க்கிறார்கள். அவர்களின் கணக்கீட்டின்படி, ஒரு சிலிண்டரின் விலை 1,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 6 சிலிண்டர்களுக்கு 6000 ரூபாய் மட்டுமே செலவாகும். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த 12,000 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம்.
மத்திய அரசு ஏற்கனவே "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் மூலம் மானிய தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. அதே போன்றதொரு முறையைப் பின்பற்றி, மாநில அரசு இந்த 6 சிலிண்டர்களுக்கான தொகையை மக்களின் கணக்கில் செலுத்தினால், முறைகேடுகளைத் தவிர்த்து இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.
சிலிண்டர் விநியோகம் தட்டுப்பாடு
மார்ச் மாதத்தில் நிலவிய கடும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அச்சமடைந்து வழக்கத்தை விட 2 மடங்கு சிலிண்டர்களை முன்பதிவு செய்தனர். இதனால் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் இப்போது நிலைமை சீராகி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விழிப்புணர்வு காரணமாக முன்பதிவு எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இப்போது சீனியாரிட்டி அடிப்படையில், முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆண்டுக்குச் சுமார் 12,408 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை இத்திட்டத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது.
கடன் சுமை - பொருளாதார சூழல்
கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வரும் 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்தக் கடன் அளவு சுமார் 11,00,000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய இக்கட்டான பொருளாதார சூழலையும், அதிகரித்து வரும் கடன் சுமையையும் கருத்தில் கொள்ளும்போது, இல்லத்தரசிகளுக்கான இந்த இலவச எரிவாயு சார்ந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதை விஜய் சில காலத்திற்குத் தள்ளிப்போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சூப்பர் 6 வாக்குறுதி
தவெகவின் இந்த "சூப்பர் 6" வாக்குறுதி இல்லத்தரசிகளின் வாக்குகளைக் கவரும் வலிமை கொண்டதுதான். ஆனாலும் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் மாநிலத்தின் கடன் சுமை ஆகிய இரட்டைச் சவால்களைச் சமாளித்து, இந்தத் திட்டத்தை விஜய் எப்படித் தரை இறக்கப் போகிறார் என்பதே 2026 தேர்தலின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications