6 சீட்.. ஸ்டாலினுக்கு செக் வைத்த ராகுல் காந்தி? சபரீசனா? சீனியர்ஸா? அமித் ஷா தந்த ரகசிய அசைன்மென்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதற்கு இணையாக நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களையும் கடுமையாக திணறடித்து வருகிறது.. தேர்தலுக்கு முன்பே இப்படியொரு பரபரப்பு இரு திராவிட கட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது, பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது..
பொதுவாக சட்டமன்றத் தொகுதிப் பங்கீட்டில் தான் இழுபறி நீடிக்கும், ஆனால் இந்த முறை கூட்டணி உடன்பாடு + ஒரு ராஜ்யசபா சீட் என்ற புதிய நிபந்தனையுடன் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதால், அறிவாலயமும் ராயப்பேட்டையும் ஒருசேர விழிபிதுங்கி நிற்கின்றன..

ராஜ்ய சபா சீட்
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு ஆகிய திமுகவினரும், அதிமுக தரப்பில் எம். தம்பிதுரை மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது..
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காலியாகும் இந்த 6 இடங்களில் 4 இடங்கள் திமுக-வுக்கும், 2 இடங்கள் அதிமுக-வுக்கும் கிடைப்பது தற்போதைய எண்ணிக்கையைப் பொறுத்து சாத்தியமாக உள்ளது.. ஆனால் இந்த எண்ணிக்கையை விட, அந்த இடங்களுக்குக் குறிவைக்கும் நபர்களின் எண்ணிக்கை தான் மலைக்க வைக்கிறது..
திருச்சி சிவா
ஆளுங்கட்சியான திமுக தரப்பில், மூத்த தலைவர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படும் நிலையில், மிச்சமுள்ள 3 இடங்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது..
சபரீசன் பெயர் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட, மறுபுறம் இளைஞர் அணி சார்பில் ஜோயல் அல்லது கொங்கு மண்டலத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேச்சு எழுகிறது..
இது ஒருபுறமிருக்க, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக, விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் தலா ஒரு ராஜ்யசபா சீட்டை கோரி வருகின்றன.. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத் தொகுதிகளைக் குறைத்துக் கொண்டால் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது..
அதிமுக-வின் நிலையோ இதைவிட சிக்கலாக இருக்கிறது.. கையில் இருக்கும் இரண்டே இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளை சமாளிக்க எடப்பாடி கே. பழனிசாமி திணறி வருகிறார்..
பாமக அன்புமணி
பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ்க்கு ஒரு இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய எம்பி ஜி.கே. வாசன் மீண்டும் அதே இடத்தை எதிர்பார்க்கிறார் என கூறப்படுகிறது.. இதற்கிடையில், டி.டி.வி. தினகரன், அமித் ஷா மூலம் ஒரு சீட்டுக்காக முயற்சி செய்து வருகிறார் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..
தேமுதிக-வின் பிரேமலதா விஜயகாந்த், கடந்த முறை போல் ஏமாற்றம் ஏற்படக்கூடாது என இப்போதே கட்சிக்குள் வலியுறுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.. எம். தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் ஒரு இடம் மட்டுமே மிஞ்சும் என்பதால், கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்த ஜி.கே. வாசனை வேறு மாநிலம் வழியாக எம்பியாக்கும் வாய்ப்பு குறித்து பாஜக தரப்புடன் ஆலோசனை நடக்கலாம் என்ற தகவலும் வெளியாகிறது..
மேற்கண்ட நகர்வுகளைப் பார்க்கும்போது, இந்த ராஜ்யசபா தேர்தல் என்பது வெறும் பதவிக்கான போட்டி மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் விசுவாசத்தையும் பெரிய கட்சிகளின் ஆளுமையையும் சோதிக்கும் அரசியல் பரீட்சையாக மாறியுள்ளது..
அரசியல் கணக்குகள்
நிச்சயமாக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் காட்டும் பிடிவாதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிகபட்ச அரசியல் ஆதாயத்தைப் பெறும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன..
சட்டமன்ற தொகுதிகளைப் பங்கிடும்போது ஏற்படும் கசப்புகளை துடைக்க ராஜ்யசபா சீட் ஒரு சமநிலை கருவியாக பயன்படுத்தப்படுகிறது.. ஆனால், கட்சி நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே இடங்களை ஒதுக்கினால், அது இரு கட்சிகளுக்குள்ளும் உள்ளூர் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்..
இறுதியில், தொகுதிப் பங்கீடு என்ற பெரிய அரசியல் போரில் முன்னிலை பெற, ராஜ்யசபா என்ற சிறிய அரசியல் சவாலில் சில சமரசங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இரு தலைமைகளும் உள்ளன என்பதே தற்போதைய நிலவரமாக பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications