கைகொடுக்கும் புது சட்டம்.. சென்னையில் 60% குறைந்த போக்குவரத்து விதிமீறல்.. போலீஸ் சொன்ன குட்நியூஸ்
சென்னை: புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறல்களில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்திருப்பதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சட்டத்தின் கீழ் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதால், இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விபத்துகளும் குறைந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே நிலைமை தொடர்ந்தால், இன்னும் ஒரே வருடத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் முற்றிலுமாக குறைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அலறவிடும் அபராதம்..
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியது. கடுமையான அபராதங்கள், அதிரடி கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்த சட்டத்துக்கு முதலில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனினும், இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமலானது. இச்சட்டத்தின் கீழ் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000-ம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ10,000-ம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ரூ.17 கோடி அபராதம் வசூல்
இதுபோல, பல்வேறு வாகன விதிமீறல்களுக்கு 5 மடங்கு முதல் 10 மடங்கு வரை கூடுதல் அபராதம் இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் சென்னையில் மட்டும் ரூ.17 கோடியே 47 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல், 1 லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சாராசரியாக ஒரு மாதத்துக்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவாகி வந்தன. தற்போது, ஒரு மாதத்துக்கு வெறும் 97 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, போக்குவரத்து விதிமீறல்கள் 60 சதவீதம் குறைந்திருக்கின்றன.

பழைய வழக்குகள் - புதிய வழக்குகள் எண்ணிக்கை
புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, ஒரு மாதத்துக்கு சுமார் 94,723 வழக்குகள் பதிவாகும். ஆனால், தற்போது அது 41,790-ஆக குறைந்துள்ளது. முன்பு, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக மாதத்துக்கு 2461 வழக்குகள் போடப்படும். இப்போது அது 713-ஆக குறைந்திருக்கிறது. சிக்னலை மீறுதல் தொடர்பாக முன்பு 7580 ஆகவும், தற்போது இது 2356 ஆகவும் குறைந்திருக்கிறது. முன்பு சீட் பெல்ட் அணியாததற்காக 11,788 வழக்குகள் போடப்படும். தற்போது இது 4 ஆயிரமாக குறைந்துள்ளது.

"எதிர்காலத்தில் மேலும் குறையும்"
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு பிறகு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் வாகன விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருக்கிறது. மேலும், இந்த அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஹெல்மெட் வாங்கி விடலாம், லைசென்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். இது ஒரு நல்ல மாற்றம். மேலும், வாகன விதிமீறல்கள் குறைந்த காரணத்தால் விபத்துகளும் குறைந்திருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஓராண்டிலேயே வாகன விதிமீறல்கள் முற்றிலுமாக குறைந்துவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications