60 வருட ரெக்கார்ட் பிரேக்! NITக்குள் 2 பழங்குடி மாணவிகள்! IITக்குள் ஒரு ஆதிதிராவிட மாணவன்!
சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் இரண்டு பழங்குடி மாணவிகள் மற்றும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வெற்றி பெற்று ஐஐடி மற்றும் என்.ஐ.டியில் சேர்ந்து உயர்கல்வி படிப்பில் சேர்ந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம் பல மாணவர்களின் வாழ்க்கையில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை என்பது 51% ஆக இருந்து வரும் நிலையில், அதை 100% ஆக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் பல மாணவர்கள் வெளிநாடுகள் வரை சென்று உயர்கல்வி பெற்று உள்ளனர். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் மேலும் சில அதிரடியான மாற்றங்கள் நடந்துள்ளது. திருச்சி என்.ஐ.டி வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பழங்குடி மாணவிகள் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று வளாகத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மலைக்கிராமம் சின்ன இலுப்பூர்.
இங்கே அதிகம் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கே வாழ்ந்து வரும் மதியழகன், வசந்தி தம்பதியினரின் மகள் தான் ரோகிணி. இவர் நடைபெற்று முடிந்துள்ள ஜேஇஇ தேர்வு எழுதி அதில், 73.8% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் திருச்சி என்.ஐ.டியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவரது வீட்டில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சாதாரண மண் வீடாக உள்ளது. இவர் மரத்தடியிலும், அரசு கட்டடங்களிலும் உட்கார்ந்துதான் தனது பரீட்சைக்காகத் தீவிரமாகப் படித்து வந்திருக்கிறார். தனது வெற்றி குறித்து ரோகிணி, "அரசு மட்டும் உதவவில்லை என்றால், என்னால் இந்த பரீட்சையை எழுதியே இருக்க முடியாது. நான் படிப்பதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்றுள்ளது. அது மிகப்பெரிய உதவி. அது மட்டுமல்ல, இந்த பரீட்சை எழுதுவதற்கான அனைத்து பயிற்சியையும் அரசுதான் ஏற்படுத்திக் கொடுத்தது.
1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்போதுதான் ஜே இ இ பரீட்சை வைத்தார்கள். அதில் முதற்கட்டம் வெற்றி பெற்றேன். அதன்பின்னர் அட்வான்ஸ் தேர்வு எழுதச் சென்னையில் 2 மாதம் கோட்சிங் கொடுத்தார்கள். அதிலும் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று சொல்லும் ரோகிணி படிப்பு நேரம் போக ஊரில் மரவள்ளிக் கிழங்கு விவசாயப் பணிகளையும் செய்து வருகிறார். ஒரு பக்கம் குடும்ப சுமை, மறுபுறம் பொறுப்பான படிப்பு என்று கவனம் சிதறாமல் இருந்து வென்றுள்ளார்.

இவரது ஆசிரியர் கெரோலின், "இவள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி. கேள்விகளைப் புரிந்து கொண்டு படிப்பாள்" என்கிறார். ரோகிணியின் ஊருக்குச் சரியான பேருந்து வசதி கூட இல்லை. ஒரு நூலக வசதி கூட இல்லை. அதை எல்லாம் ஒரு குறையாகக் கொள்ளாமல் குறியாக இருந்து வென்றுள்ளார். இவரது பெற்றோர் கேரளாவில் விவசாய கூலிகளாகத் தொழில் செய்து வருகின்றனர்.
இவரைவிட மிகவும் ஏழ்மையான பின்புலத்திலிருந்து மேலே உயர்ந்து வந்துள்ளார் சுகன்யா என்ற மாணவி. சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலையில் உள்ள வேலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா. இவரும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்தான். இந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று என் ஐடியில் சேர்ந்துள்ளார். இந்த வெற்றி சாதாரணமானது இல்லை. மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளேன் என்கிறார் சுகன்யா. இவருக்குத் தாய் இல்லை. இடி தாக்கி அவர் இறந்துபோய்விட்டார். அப்பாவும் இல்லை. உறவினர் வீட்டில் தங்கித்தான் படித்து வந்துள்ளார்.

திருச்சி என்ஐடியின் 60 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த இரண்டு பழங்குடி மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதுவும் ஒரு மாணவி மாநில அளவில் முதல் இடம் பிடித்து உள்ளே போய் இருக்கிறார். இது சாதாரணம் அல்ல, வரலாற்று மாற்றம். இந்த இரண்டு பழங்குடி மாணவிகள் போல நான் முதல்வன் திட்டம் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஒரு ஆதிதிராவிட மாணவர் சென்னை ஐஐடியில் சேர உள்ளார்.
ராஜபாளையம் அடுத்துள்ள சுந்தரராஜாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சந்திரபோஸ் மகன் பார்த்தசாரதி. இவர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவரது பள்ளியில் நடைபெற்ற முதற்கட்ட ஜேஇஇ தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். அங்கே 'நான் முதல்வன் திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்ட ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் 112 மதிப்பெண் எடுத்து வான்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது.
தனது வெற்றி குறித்து பார்த்தசாரதி, "இந்த ஆண்டு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் முதல் நபராக நான் ஐஐடிக்குள் படிக்கப் போகிறேன். எனக்கு ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்துள்ளது" என்கிறார்.
ஐஐடி, என்ஐடி என்பது இத்தனை ஆண்டுகாலம் எட்டாக்கனியாக இருந்து வந்த சமூக பின்புலத்திலிருந்து இந்தப் பிள்ளைகள் இன்று இந்தளவுக்கு உழைப்பைக் கொட்டி வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டி உள்ளனர். முறையாகப் பயிற்சி எந்தத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்பதை இவர்கள் உலகத்திற்கு தங்களின் வெற்றி மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications