’விக்ரம்’ டூ ‘விஸ்வரூபம்’ வரை..டெக்னாலஜி புலியாக மாறிய கமல்! சினிமா தரத்தை உயர்த்திய 7 படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைத்துறைக்கு வந்து 65 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் பல புதிய டெக்னாலஜியை இந்திய சினிமாவிலேயே முதன் முறையாகப் பயன்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன டெக்னாலஜியை புதியதாக அறிமுகப்படுத்தினார்? அவை எந்தத் திரைப்படங்கள்?

நடிகர் கமல்ஹாசன் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா'வில் முதன்முதலாக அறிமுகமானார். அந்தப் படம் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் 'அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே' பாட்டுக்கு வாயசைத்த இந்தக் குழந்தையைப் பார்த்து சினிமா ரசிகர்கள் அசந்து போனார்கள்.

Kamal Haasan Tamil cinema

இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை ஏவி.எம் தயாரித்தது. இது 100 நாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமானது. கூடவே சிறந்த குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் வாங்கினார். கமல்ஹாசனுக்கு முதல் அடியே வெற்றிப் படியாக மாறியது.

இதுவரை கமல்ஹாசன் 233 படங்களில் நடித்துள்ளார். இவர் அளவுக்கு சினிமா உலகில் சீனியர் நடிகர் இந்திய சினிமாவில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது சந்தேகமே. இன்றுவரை இவர் நடிகராக மட்டும் இல்லை, சிறந்த வசூல் மன்னனாகவும் இருந்து வருகிறார்.

ஒருவேளை சீனியர் நடிகர்கள் வேறு யாராவது இருந்தால் கூட அவர் நடிகராக மட்டுமே இருக்கக்கூடும். ஆனால், கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், அடிப்படையில் அவர் டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், மேக் அப் ஆர்டிஸ்ட் இப்படி பன்முகம் கொண்ட வேறு ஒருவரை இந்திய சினிமாவில் பார்க்க முடியாது.

அவர் தமிழ் சினிமாவின் தரத்தை வேறு தளத்திற்கு முன்னேற்ற பல முயற்சிகளை எடுத்திருக்கிறார். அவை முன்னோடி முயற்சிகளாக இருந்துள்ளன. நவீனத் தொழில்நுட்பத்தைத் திரையுலகிற்குக் கொண்டுவந்து சேர்த்ததில் இவரது பங்களிப்பு முக்கியம். 'அபூர்வ சகோதரர்களி'ல் குட்டை வேடம் போட்டது முதல் 'இந்தியனி'ல் தாத்தா வேடம், 'அவ்வை சண்முகி'யில் பெண் வேடம் போட்டது வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். 'தசாவதாரம்' படத்தில் அவர் போட்ட பல வேடங்கள் அவரது மேக் அப் ஆற்றலுக்கு ஆதாரம். இவற்றைத் தாண்டி தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் மாடர்ன் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி அசத்திய ஏழு படங்களைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

விக்ரம்: ராஜசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த அதிரடி மற்றும் சாகசம்தான் 'விக்ரம்'. இதில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத் கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸ்ஸி, சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில், கோலிவுட்டில் முதல் முறையாகப் பாடல்களைப் பதிவு செய்யக் கணினிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் படத்தின் இசையை இளையராஜா இசையமைத்தார்.

தேவர் மகன்: பரதன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை கமல்ஹாசன்தான் எழுதினார். சாதிய அரசியலைப் பேசிய 'தேவர் மகன்' 1992இல் வெளிவந்தது. படம் வெளியான காலத்தில் வெற்றிப் படமாகப் பேசப்பட்ட இது இன்றைக்கு ஒரு 'கல்ட் சினிமா' எனப் போற்றப்படுகிறது. ஆனாலும், இதனை விமர்சன ரீதியாக எதிர்க்கும் புதிய தலைமுறை ஆட்களும் உள்ளனர். தமிழ் சினிமாவில் முதன்முறையாக திரைக்கதை எழுதுவதற்காக மென்பொருளை கமல் பயன்படுத்தினார்.

இந்தியன்: ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசன் சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவரது மகனாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்திய சினிமாவில் முதன்முறையாகச் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக கதாபாத்திர தோற்றத்திற்காக கமல்ஹாசன் Prosthetic makeup தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ்: கமல்ஹாசன் நடித்த இந்தப் படம் டிஜிட்டல் வடிவில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படமாகும். தமிழ் மற்றும் இந்தியில் ஒரே தலைப்பில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடைந்தது.

Kamal Haasan Tamil cinema

விஸ்வரூபம்: புதிய ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம் 'விஸ்வரூபம்'தான். படத்தில் மதரீதியாகப் பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. இதனால் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே இந்தப் படத்தை வெளியிட அன்றைய முதல்வர் ஜெயலலிதா விதித்தார். பின்னர் தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன் நீதிமன்றம் சென்றார். வாதாடி, வெற்றி பெற்ற பின்னர் படம் வெளியானது. இதனால் மிகப்பெரிய கடன் தொல்லையில் கமல் மாட்டினார். அவரது ஆழ்வார்பேட்டை வீட்டை அடமானம் வைக்கும் அளவுக்கு அவரது நிதிநிலை மோசமானது.

விருமாண்டி: கமல் இயக்கிய 'விருமாண்டி' தமிழ் திரையுலகின் முக்கிய படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. இப்படம் பலருக்கு உத்வேகமாக அமைந்தது. நேரடி ஒலிப்பதிவு முறையைப் பயன்படுத்திய முதல் தமிழ்த் திரைப்படம் இதுதான். ஷூட்டிங்கின் போதே வசனங்கள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டன.

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மோஷன் கன்ட்ரோல் ரிக்கைப் பயன்படுத்திய முதல் திரைப்படம் இதுதான். மேலும், இந்தியாவில் அனிமேஷன் காட்சிகளைப் பயன்படுத்திய முதல் படம் இதுவே ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+