வயதானவர்கள் மட்டுமே டார்கெட்.. சென்னையில் 80 வயது மூதாட்டியை கொடூரமாக கொன்ற சைகோ ரவுடி
சென்னை: சென்னை வியாசர்பாடியில் கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொலை செய்த சைகோ ரவுடி முரளி கிருஷ்ணன் என்பவனை போலீஸ் கைது செய்துள்ளது. 15 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்த முரளி, கொடூர கொலை சம்பவம் மூலம் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார். அவரின் சைகோத்தனத்தை கேள்விப்பட்டால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா. வயது 80. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். உறவினர்கள் இருப்பினும், மீனா தனியாக தான் இருந்துள்ளார். அவர் கீழே மயங்கி விழுந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு வேறு ஏதோ நடந்திருப்பதை உணர்ந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மூதாட்டியின் வீட்டின் அருகே இருந்த ரவுடி முரளி கிருஷ்ணன், அவரை கொலை செய்தது தெரியவந்தது. முரளி கிருஷ்ணன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. மற்றொரு வழக்கில் சிறையில் இருந்த முரளி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். அதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் செய்து சிறைக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் கூறுகையில், "வயதாகிவிட்டதால் கீழே விழுந்து அடிபட்டிருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் சுவரெல்லாம் ரத்தம் தெறித்திருந்ததைப் பார்த்து சந்தேகம் வந்தது. அதன்பிறகு தான் காவல்துறையில் புகாரளித்துள்ளோம். அவனை தடுத்து எதிர்த்து எதுவும் செய்ய முடியாத வயதானவர்களை தான் அவன் குறிவைப்பான். குறிவைத்து சைக்கோ தனமாக தாக்குவான். அவனை எல்லாம் வெளியில் விடுவதே தவறு.
அவன் வெளியில் இருந்தால் சிறிய குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. உயிரிழந்தவர் என் பெரியம்மா. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக இங்குதான் இருக்கிறார். வயது 80 ஆகிவிட்டதால் பாத்ரூம் செல்வதற்கு சிரமப்படுவார். இருப்பினும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று அவரே எல்லாம் செய்துகொள்வார். நாங்கள் அவ்வப்போது அவரை கவனித்துக் கொள்வோம்.
நேற்று முன்தினம் அந்த சைகோ அவர்களை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளான். கையில் சிறிது பணம் இருந்துள்ளது. அதைப் பிடுங்குவதற்காக அப்படி செய்திருக்கிறான் என நினைத்தோம். ஆனால், அவரின் பணம், நகை அப்படியேதான் இருக்கிறது. சிறிதளவு பணம் மட்டும் எடுத்திருக்கிறான்.
இவன் இதேபோல பல சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸ், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். இவன் மனிதனே கிடையாது. இப்படிப்பட்ட அயோக்கியனை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். அவனுக்கு தண்டனை கிடைத்து நீதி வாங்கித் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுபோல யாருக்கும் நடக்கக் கூடாது. அவன் எங்கு சென்றாலும் இந்த வேலைகளில் ஈடுபடுவான்." என்று கூறினர்.
இந்த சம்பவத்தின்போது முரளி கஞ்சா போதையில் இருந்துள்ளான். மேலும் மூதாட்டியின் கம்மல் உள்ளிட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றை முரளி எடுக்கவில்லை. எனவே, மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அக்கம், பக்கத்தினரும் முரளியின் நடவடிக்கையில் இதே புகார்களை கூறுவதால், போலீஸ் அந்த கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூதாட்டியின் உறவினர் மற்றும் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications