ஆரம்ப சம்பளம் 69,000.. வருடத்திற்கு 6% உயர்வு? 8-வது ஊதிய கமிஷன்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
சென்னை: 8-வது ஊதிய கமிஷன் முன் சமீபத்தில் மத்திய அரசின் தொழிற்சங்கள் அமைப்பு வைத்த கோரிக்கைகள் வெளியாகியுள்ளன. NC-JCM என்ற குழு வைத்த வரைவு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. ஆரம்ப அடிப்படை சம்பளமே 69 ஆயிரம் ரூபாயும் ஆண்டுக்கு 6 சதவீத சம்பள உயர்வும், பழைய ஓய்வூதியமும் பரிந்துரைகளில் கோரப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதத்தை கணக்கிட ஊதிய கமிஷன் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 7-வது ஊதிய வகமிஷன் பரிந்துரைகள் கடந்த 2016 ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது 8 வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 வது ஊதிய கமிஷன்
இந்தக் குழு 18 மாதங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க உள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும். மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடமும் பரிந்துரைகளை பெற்று வருகிறது.
அந்த வகையில், என் சி - ஜேசிஎம் என்று அழைக்கப்படும் National Council (Joint Consultative Machinery) ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக தனது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழு முன்வைத்த பரிந்துரையில், அடிப்படை சம்பள உயர்வு, பென்ஷன் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் மேம்படுத்துவது ஆகியவற்றை இடம் பெற்றுள்ளது. வழக்கு செலவுகளை ஈடுசெய்யும் வகையில், இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை சம்பளம் ரூ.69 ஆயிரம்
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.69 ஆயிரமாக வழங்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. சம்பள உயர்வு காரணியை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் பேக்டர் 3.83 ஆக முன்மொழிந்துள்ளது. அனைத்து திருத்தங்களும் 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். எந்தத் தாமதமும் ஏற்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பே மேட்ரிக்ஸ்சை எளிதாக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. 18 லெவல்களாக இருப்பதை 7 லெவல்களாக மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்புதிய ஊதியக் கட்டமைப்பு குறைவான நிலைகளுடன் அதிக தொடக்கச் சம்பளம் வழங்கும் வகையில் உள்ளது. தற்போது ₹18,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஊதியம் ₹69,000 ஆக உயரலாம்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அடுத்த நிலைகளில் குறைந்தபட்ச ஊதியம் ₹83,200 ஆக இருக்கும். ₹1.12 லட்சமாகவும் அடுத்தடுத்த நிலைகளில் உயரும். மிட் லெவல் ஊழியர்களுக்கு ₹1.35 லட்சம் முதல் ₹2.15 லட்சத்திற்கு மேல் ஆரம்பச் சம்பளம் இருக்கும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக, 2004 ஜனவரி 1-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியுள்ளது.
5 பதவி உயர்வு
மேலும், ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தின் 67% ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், குடும்ப ஓய்வூதியம் 50% ஆக இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தது 5 பதவி உயர்வு அல்லது நிதி மேம்பாடு 30 வருட சர்வீஸ் காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் படிகளை மேம்படுத்தவும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் (HRA) கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அளவில் 30% வரை அலவன்ஸ் இருக்க வேண்டும் எனவும் பெருநகரங்களுக்கு இன்னும் அதிகமாகவும் இது இருக்கவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டமும் கோரப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு 240 நாட்களாக அதிகரிப்பு
பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு 240 நாட்களாக உயர்த்தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் பராமரிப்பு விடுப்பு, தந்தைகளுக்கு வழங்கப்படும் விடுப்பு காலத்தையும் நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு மட்டங்களில் உள்ள தொழிலாலர் சங்கங்கள் மற்றும் அசோசியன்களின் கூட்டமைப்பான NC-JCM வழங்கியுள்ள இந்த பரிந்துரை முக்கியமான ஆவணமாக 8 வது பே கமிஷனில் ஆய்வு செய்யப்படும். எனினும், இவை அனைத்தும் வெறும் பரிந்துரைகள் மட்டுமே ஆகும். இறுதி முடிவு அரசு மட்டுமே எடுக்கும்.














Click it and Unblock the Notifications