மக்களே உஷார்..ஓடிபி கூட கேக்கல..புது டெக்னிக்..சென்னை ஐடி ஊழியர் அக்கவுண்டில் இருந்து 9 லட்சம் அபேஸ்
சென்னை கொளத்தூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மின் கட்டணம் செலுத்தவில்லை என்று வந்த மெசேஜை கிளிக் செய்ததில், சென்னை கொளத்தூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இணையம் மூலமாக நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் என்று சொல்லப்படும் இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் எங்கே இருந்து கொண்டு வங்கிக் கணக்கில் இருந்து லட்சகணக்கில் சுருட்டி விடுகின்றனர்.
வங்கியிலிருந்து பேசு வதாகக்கூறி ஏ.டி.எம் கார்டு தருகிறோம்.. ஆதார் எண் அப்டேட் செய்து கொடுக்கிறோம் என பேசும் மோசடி நபர்கள் நைசாக பேசி வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி விடுகின்றனர்.

பரிசு பொருள் விழுந்துள்ளதாக மோசடி
இதன் பிறகு ஓடிபி எண்ணை கேட்டு வாங்கி வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். இது போன்ற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருபக்கம் முன் பின் தெரியாதவர்கள் யார் கேட்டாலும் ஓடிபி விவரங்களையோ.. பிற வங்கிக் கணக்கு விவரங்களையோ பகிரக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசாரும் அறிவுறுத்தியிருக்கின்றனர். அதேபோல், பரிசு பொருள் விழுந்துள்ளதாகவும் அதை பெற ஆயிரக்கணக்கில் பணத்தை அனுப்புங்கள் என்று சொல்லியும் மோசடி அரங்கேறி வருகிறது.

9 லட்சத்து 50 ஆயிரம் அபேஸ்
ஓடிபி விவரங்கள் எதுவும் சில செயலிகள் மூலாமாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மோசடியும் ஆங்காங்கே நடைபெறுவதாக புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தான் சென்னை ஐ.டி. ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் படிக்காதவர்களை பார்த்துத்தான் இப்படி மோசடிகள் அரங்கேறும் என்றால் ஐடி துறையில் பணியாற்றியவரிடமே சைபர் திருட்டு முறையில் பணத்தை இணைய கொள்ளை கும்பல் நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மின் கட்டணம் செலுத்துமாறு மெசேஜ்
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் நிஹ்மத்துல்லாஹ். இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் மின் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. மின் கட்டணம் செலுத்திய ரசீதை குறுஞ்செய்தியில் வந்துள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்றும் மெசேஜில் இருந்ததாம். இதனால் அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த செயலியை பதவிறக்கம் செய்து 10 ரூபாய் செலுத்தினால்தான் மின் கட்டணம் சர்வரில் அப்டேட் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

13 லட்ச ரூபாய் லோன் எடுத்ததாக
இதனை நம்பிய நிஹ்மத்துல்லாஹ் அந்த லிங்கை கிளிக் செய்த போது நிஹ்மதுல்லா வங்கியில் இருந்து 13 லட்ச ரூபாய் இன்ஸ்டா லோன் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து மூன்று தவணையாக 9.50 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதனால், பதறிப்போன அவர் சைபைர் கிரைம் போலீசில் புகார் கொடுத்ததாக தெரிகிறது. இந்த இணைய திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த வித ஓடிபி விவரங்களையும் பெறாமலேயே வங்கிக்கணகில் இருந்து 9.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications