தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்த "விஜயகாந்த்"? வீடியோவை பார்த்து தொண்டர்கள் மெய்சிலிர்ப்பு
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமையான நேற்றைய தினம் விஜயகாந்த் எந்த வழியாக வருவாரோ அதே வழியில் நாகப்பாம்பு ஒன்று வந்த வீடியோவை எண்ணி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த இடமே கட்சி அலுவலகம்தான். எனவே அந்த இடத்திற்கு அவர் நேரில் வந்துவிட்டார் என்றே ரசிகர்களும் தொண்டர்களும் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்.

விஜயகாந்த்... அவர் நடித்த படத்தின் பெயருக்கேற்ப சொக்கத் தங்கம்! சினிமா துறையில் ப்ரொடெக்ஷன் சார்பாக வழங்கப்படும் உணவில் ஒரு பெரிய புரட்சியே செய்துவிட்டார். அது போல் ஹீரோவை தவிர ஒரு படத்தில் நடிக்கும் அத்தனை பேரும் மனிதர்கள்தானே என கூறி தனக்கு கொடுத்த கேரவனை மற்ற நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் பயன்படுத்த அனுமதித்தார்.
பல நேரங்களில் ஷாட் முடிந்தாலும் கேரவனுக்கு செல்லாமல் கடை நிலை ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு அங்கேயே ஒரு துண்டை விரித்து படுத்துவிடுவார். இப்படிப்பட்ட மனிதருள் மாணிக்கம்தான் விஜயகாந்த் என அவருடைய ரசிகர்கள் பெருமை பொங்க கூறிக் கொள்கிறார்கள்.
விஜயகாந்த் எத்தனை பேருக்கு அள்ளி அள்ளி உதவி செய்திருக்கிறார்! அது போல் தனது ஆண்டாள் அழகர் கல்லூரியில் எத்தனை ஏழை மாணவர்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்! இவை அத்தனையும் புண்ணியம்தான்! திரைப்படக் கல்லூரியில் படித்த பலரை நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார், புது இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே அஞ்சிய காலகட்டத்தில் எத்தனையோ புதுமுகங்களை இயக்குநராக அறிமுகப்படுத்தி அந்த படங்களில் அவரே நடித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு மாலையில் நல்லடக்கம் செய்ய தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவருடைய உடலை கருடன் 3 முறை சுத்தியதும் தொண்டர்கள் மெய்சிலிர்த்து போனர்.
மார்கழி மாதம் இறந்தாலே சொர்க்கம்தான் என்பார்கள். ஆனால் விஜயகாந்த் மார்கழி மாதத்தில் இறந்ததுடன் கருடன் 3 முறை வலம் வந்ததாக நேரடியாக விஜயகாந்தின் ஆன்மாவை பெருமாளிடம் கருட பகவான் அழைத்து செல்வார் என்பது ஐதீகம். இதனால்தான் தொண்டர்களும் விஜயகாந்த் குடும்பத்தினரும் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை தொண்டர்கள் கோயில் என அழைக்கிறார்கள். அங்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அவரை அடக்கம் செய்த சில நாட்களில் அவரது புகைப்படத்தில் பாம்பு ஒன்று வந்து சென்றது. இதையடுத்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் விருப்பமான இடமான கோயம்பேட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவர் எந்த வழியாக வந்து கட்சி அலுவலக அறைக்குள் செல்வாரோ அதே வழியாக நல்லப் பாம்பு ஒன்று வந்து அவர் அறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டது. இதை பார்த்ததும் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் நெகிழ்ச்சி அடைந்தனர். கேப்டனே மீண்டும் வந்து அவருடைய அறையை பார்க்கிறார் என தொண்டர்கள் பேசிக் கொண்டனர். விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் தினந்தோறும் அவரது சமாதியில் வழிபாடு நடத்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள்.
அது போல் கேப்டனின் சாலிகிராமம் வீட்டிலும் அவருடைய புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு அங்கு தினந்தோறும் பூஜைகள் செய்யப்படுகின்றன. மேலும் கேப்டன் அணிந்திருந்த நகைகள், மூக்கு கண்ணாடிகளும் அங்கேயே வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications